முகப்பு
தூத்துக்குடி

உரிய அங்கீகாரம் தேடும் மீனவர்கள்!

பேரிடர் காலங்களில் உயிரை துச்சமாக நினைத்து, துரிதமாக மீட்புப் பணிகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு, அரசு பணி போல் அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மீனவர்கள் வலியுறுத்தல்

Updated On : 1 ஏப்ரல், 2026 at 12:50 AM
- பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில், கோவில்பட்டியை தவிர்த்து மற்ற 5 தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ள கடற்கரை பூர்வகுடிமக்களான மீனவ சமுதாய மக்கள், பேரிடர் காலங்களில் உயிரை துச்சமாக நினைத்து, துரிதமாக மீட்புப் பணிகளில் ஈடுபடும் தங்களுக்கு அரசும், அரசியல் கட்சிகளும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றி, தோல்வியை மாற்றி நிர்ணயிக்கும் சக்தியாக மீனவ சமுதாய மக்கள் விளங்குகின்றனர். இதனாலேயே தேர்தல் காலங்களில், அரசியல் கட்சியினர் இவர்களை நோக்கி படையெடுத்து வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து விடுகின்றனர்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்கள் பிரதிநிதிகள் சரியாக கண்டுகொள்வதும் இல்லை, வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதும் இல்லை என்று இச்சமுதாய மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முக்கிய கோரிக்கைகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய மீனவர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியங்கள் முறையாக கிடைக்கவும், பட்டா வழங்கவும். இயற்கை பேரிடர் காலங்களில் படகு, வலை போன்ற இதர பொருள்களை பாதுகாக்க இடவசதி செய்து தரவும் நடவடிக்கை வேண்டும்.

நிலக்கரி இறங்குதளத்துக்காக திருச்செந்தூர் கடலில் போடப்பட்டுள்ள கற்களை அகற்றி கடற்கரையை காக்க வேண்டும். கல்லாமொழி அனல்மின் நிலையத்துக்காக கடலில் அமைக்கப்பட்டுள்ள பாலம், கற்களால் கடற்கரையே கிராமங்களில் காணாமல் போகிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

காயல்பட்டினம் சுனாமி நகரில் மீன் ஏலக்கூடம், மின்விளக்கு அமைத்து தர வேண்டும். திருச்செந்தூர் ஜீவா நகருக்கு அரசு ஒதுக்கிய தூண்டில் பாலம் நிதியை கொண்டு, அந்த கடற்கரையை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும். புன்னைக்காயலில் நிலவும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

கடற்கரை கிராமங்களில் தகுதியானவற்றை தேர்ந்தெடுத்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். அமலிநகர், ஆலந்தலை தூண்டில் வளைவு பாலங்களை சரியான முறையில் முழுமையாக அமைக்க வேண்டும். மணப்பாடு மணல்மேடுகளை அகற்ற மக்களுடன் கலந்துபேசி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீனவர் நலவாரியத்தில் 60 வயதை தாண்டும் நபர்களுக்கு முன்பு போல ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கடலில் உயிரிழக்கும் மீனவர்களின் உடல் கிடைக்காத நிலையில் இறப்பு நிதி கிடைக்க 7 ஆண்டுகள் ஆகின்றன. அதை 2 ஆண்டுகளாக மாற்றவேண்டும்.

காயல்பட்டினம் நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றுநோய் அதிகரித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. அதை ஆய்வுக்கு உட்படுத்தி நோய் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் உயிரை துச்சமாக நினைத்து, துரிதமாக மீட்புப் பணிகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு, அரசு பணி போல் அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதை காலம் காலமாக நாங்கள் கேட்டு வருகிறோம். ஆனால் அரசியல் கட்சிகள் அதை கண்டுகொள்வது இல்லை. எனவே, இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் எங்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர அழுத்தம் தருகிறோம் என மீனவர்கள் தெரி வித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.