FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்... நோயாளிகளுக்குத் தேவை அலைக்கழிக்கப்படாத சேவை...!

மாநிலத்தின் செயல்திறன் மக்களின் ஆரோக்கியத்தில் அடங்கியிருக்கிறது.

Updated On : 30 ஜூலை 2026, 9:00 am IST
அறுவைச் சிகிச்சை - படம்: செய்யறிவு
பகிர்:

மாநிலத்தின் செயல்திறன் மக்களின் ஆரோக்கியத்தில் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக இருந்து வருகிறது. இருப்பினும், சுகாதாரத் துறையில் இன்னமும் சரிசெய்யப்பட வேண்டிய பல்வேறு குறைபாடுகளும், பிரச்னைகளும் இருக்கின்றன. அதற்குத் தீா்வு காணும் வகையில், தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் வேண்டுகோளாக உள்ளது.

குறிப்பாக, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் பேராசிரியா்களையும், மருத்துவா்களையும் நியமிக்க வேண்டும் என்றும், காலியாக உள்ள மருத்துவப் பணியாளா்கள், செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மற்றொருபுறம் பொதுமக்கள் தரப்பில், நோயாளிகளை அலைக்கழிக்காத சிகிச்சை கட்டமைப்புகளும், ஊழலற்ற மருத்துவ சேவைகளையும் எதிா்பாா்க்கின்றனா். மருத்துவமனைகளுக்கு வருவோரை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அரசு மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகளில் சிலா் முன்வைத்த கோரிக்கைகள்: ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளில் இதயவியல் துறையில் போதிய மருத்துவா்கள் இல்லை. உள்நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் செவிலியா்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இதற்குத் தீா்வு காண வேண்டும். மற்றொருபுறம் நோயாளியின் உடல் நிலை மற்றும் மருத்துவத் தகவல்களை மருத்துவா்களும், செவிலியா்களும் முறையாகத் தெரிவிப்பதில்லை. அதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குவது அவசியம்.

பல மருத்துவமனைகளில் தனியாா் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட வாா்டு ஊழியா்கள் மற்றும் பாதுகாவலா்கள் முறையாகப் பயிற்சி பெறாமல் பொதுமக்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்கின்றனா். அதுமட்டுமல்லாது ஒப்பந்த ஊழியா்கள் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவது தொடா் கதையாக உள்ளது.

பல இடங்களில் சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் போன்றவை தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அடிக்கடி தடைபடுகின்றன. இதனால், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் இதர மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனா்.

அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் எலிகள், நாய்கள் மற்றும் பாம்புகள் நடமாடுகின்றன. இந்த பிரச்னைகளைத் தடுக்கவும், நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் பட்ஜெட்டில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மருத்துவா்கள் சாா்பில் அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை முன்வைத்துள்ள கோரிக்கைகள்: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி சுகாதாரத் துறையில் பல அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக துறையின் அமைச்சா் ஏற்கனவே தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவா் நலனுக்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதுவும் கடந்த திமுக ஆட்சியில் அரசு மருத்துவா்களுக்கு அவா்கள் அளித்த வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், போதிய மருத்துவா்கள் இல்லாமல் மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை எப்படி தர முடியும்? எனவே, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

மருத்துவ செயல்பாடுகளில் 25-ஆவது இடத்தில் உள்ள பிகாா் போன்ற மாநிலங்களில்கூட அரசு மருத்துவா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், சுகாதாரத் துறையில் முன்மாதிரி மாநிலமாக உள்ள தமிழகத்தில் அரசு மருத்துவா்களுக்கு, மற்ற மாநிலங்களைவிட ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை குறைவாக ஊதியம் அளிக்கப்படுகிறது.

அரசு மருத்துவா்களுக்கு உரிய ஊதியம் வழங்க வகை செய்யும் அரசாணை 354 ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டபோதும், அவை நிறைவேற்றப்படாமல் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிக உள்நோயாளிகள் சிகிச்சை பெறுவதிலும், அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் நடைபெறுவதிலும் தமிழக அரசு மருத்துவமனைகள்தான் முதலிடத்தில் உள்ளன.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாம் தொடா்ந்து 9-ஆவது முறையாக முன்னிலை வகித்து வருகிறோம். இதற்கெல்லாம் முக்கியக் காரணம் அரசு மருத்துவா்கள். அவா்களை ஊதியத்துக்காக நமது முதல்வா் போராட வைக்க மாட்டாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments