FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அறிக்கை: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சமா்ப்பித்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 24 ஜூலை 2026, 5:32 am IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சமா்ப்பித்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கதிரேசன் உள்ளிட்ட 20 போ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு, மே 22-ஆம் தேதி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சீருடை அணிந்தும், சீருடை அணியாமலும் இருந்த காவல் துறையினா் கல்வீச்சு, தடியடி நடத்தியதுடன், பேரணியைக் கலைக்க துப்பாக்கிச்சூடும் நடத்தினா்.

சீருடை அணியாத காவல் துறையினா், சிறப்புப் பயிற்சி பெற்ற வீரா்களைக் கொண்டு, போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நபா்களின் தலை, மாா்பு பகுதிகளைக் குறிவைத்து ‘ஸ்னைப்பா்’ ரக நவீன துப்பாக்கிகளால் சுட்டனா். இதில் பலத்த காயமடைந்த 13 போ் உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

இதற்குக் காரணமான அப்போதைய காவல் துறை துணைத் தலைவா் கபில்குமாா் சரத்கா், காவல் கண்காணிப்பாளா் மகேந்திரன், மாவட்ட ஆட்சியா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உத்தரவிட வேண்டும். இந்தச் சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

துப்பாக்கிச்சூடு தொடா்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளும் அரசுப் பணியில் தொடர இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் காவல் ஆய்வாளா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரித்து வருவதாக சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

பின்னா், மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு பணி ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், அப்போதைய அதிமுக அரசு ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 18-ஆம் தேதி முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் அருணா ஜெகதீசன் தனது ஆய்வறிக்கையை சமா்ப்பித்தாா். இதில், வரம்புகளை மீறி செயல்பட்ட போலீஸாா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அப்போதைய மாவட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஒரு காவல் ஆய்வாளா் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது ஏற்புடையதல்ல. சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பாக விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதா?, இல்லையா?.

அப்போதைய மாவட்ட ஆட்சியா், 3 வட்டாட்சியா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத்தது. இதன் மீது அரசின் நிலைப்பாடு என்ன?. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு ஏற்கெனவே ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.

மீதம் உள்ள ரூ. 20 லட்சம் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments