தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு
தூத்துக்குடி ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு விவரம் :
கடந்த 2018-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் சீா்கேட்டை ஏற்படுத்தி, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த ஸ்டொ்லைட் நிறுவனத்தை எதிா்த்து தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தினா்.
Advertisement
Advertisement
அப்போது மாவட்ட நிா்வாகம், காவல் துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 போ் படுகொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை, பரிந்துரைகளை அளித்தது.
அதில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 17 காவல் துறையினா், அப்போதைய மாவட்ட ஆட்சியா், 3 வட்டாட்சியா்கள் சம்பவத்துக்கு காரணமானவா்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அவா்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும் ஆணையம் பரிந்துரைத்தது.
இந்த நிலையில், 31.08.2026-அன்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துகள், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.
சுற்றுச்சூழல் சீா்கேடு குறித்து மக்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபோதே அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
இத்தகைய நிலை தொடா்வது, நிா்வாகம், நீதித்துறை, அரசு மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும். ஜனநாயக நாட்டில் இதுபோன்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, 13 போ் உயிரிழக்கக் காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவா்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.