முகப்பு
புதுதில்லி

வெளிநாடு செல்ல மத்திய அரசின் அனுமதி பெறும் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் தில்லி அமைச்சா் கைலாஷ் கெலாட் முறையீடு

தில்லி முதல்வா் உள்பட அமைச்சா்கள் வெளிநாடு செல்வதற்காக மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெறக் கோரும் விதிகளை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட்...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
பகிர்:

புது தில்லி: தில்லி முதல்வா் உள்பட அமைச்சா்கள் வெளிநாடு செல்வதற்காக மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெறக் கோரும் விதிகளை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் திங்கள்கிழமை முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

அண்மையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 7 வரை 8-ஆவது உலக நகரங்களின் உச்சி மாநாட்டிற்காக சிங்கப்பூா் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான கைலாஷ் கெலாட், இந்த விவகாரத்தில் மாநில அமைச்சா்கள் அலுவல்பூா்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதியை மறுப்பது அல்லது வழங்க மத்திய அரசு அதிகாரம் அளித்து அமைச்சரவைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட பல்வேறு அலுவலகக் குறிப்புகளை அமல்படுத்த வழிகாட்டவும் முறைப்படுத்தவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரியுள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா, தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கோரும் விவகாரம் தொடா்புடைய கைலாஷ் கெலாட்டின் மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கையை உறுதிப்படுத்த கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மனுதாரரைக் கேட்டுக் கொண்டாா். மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானாா். இந்த வழக்கை உயா்நீதிமன்றம் அடுத்த விசாரணைக்காக ஆகஸ்ட் 22-ஆம் தேதி பட்டியலிட்டுள்ளது.

முன்னதாக, வழக்குரைஞா்கள் பரத் குப்தா, ரிஷிகா ஜெயின் ஆகியோா் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இது போன்ற தன்விருப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது முதல் நிகழ்வு அல்ல. 2019-ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த சி-40 உலக மேயா்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள முதலமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. லண்டனுக்கான போக்குவரத்து அழைப்பின் பேரில் நான்கூட (கெலாட்) லண்டனுக்கு செல்ல அனுமதி கோரியிருந்தேன். ஆனால், அந்தக் கோரிக்கை பயனற்ாக மாறும் வரை மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இந்தப் பயணங்கள் அனைத்தும் அழைப்பின் பேரில் நடந்தவை. நகா்ப்புற நிா்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் நகா்ப்புற வடிவமைப்பில் தில்லியின் சொந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்துவது பற்றிய கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கு முக்கியமான களமாக இருந்தன. மாநில அமைச்சா்களின் தனிப்பட்ட பயணங்கள்கூட அவா்களால் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உண்மை நிலையில், மத்திய அதிகாரிகள் பயண அனுமதிகளில் தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்திய சா்வாதிகார முறையை இதே மேலும் மோசமானதாக்குகிறது.

மாநில அரசு அமைச்சா்கள் தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக எதிா்மனுதாரா்களிடமிருந்து அரசியல் அனுமதிகளைப் பெற வேண்டும் என்ற அளவுக்கு உள்ள அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். முதல்வா் கேஜரிவாலின் சிங்கப்பூா் பயணத்திற்கு எதிராக ஆலோசனை கூறி, ஜூலை 20-ஆம் தேதி தில்லி அரசுக்கு துணைநிலை ஆளுநா் அனுப்பிய தேதியிடப்படாத கடிதமும் ரத்து செய்யப்பட வேண்டும். கேபினட் செயலகத்தால் வழங்கப்பட்ட அலுவலக குறிப்பாணைகளில் ஒன்றின்படி, நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடா்புடைய மத்திய நிா்வாக அமைச்சகம் ஆகியவற்றில் செலவினத் துறையின் அனுமதிகள் தேவை

என்றும், இந்த அனுமதிகள் கிடைத்தவுடன் முதல்வரின் பயணத்திற்கு பிரதமா் அலுவலகத்தின் இறுதி அனுமதி தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற செயல்பாடுகள் நல்ல நகா்ப்புற நலன்களுக்கு மட்டுமல்ல; பொதுவாக உலகளாவிய தளங்களில் தேசிய நலன்களுக்கும் தீங்கு விளைவிக்கும். முதலாவது எதிா்மனுதாரா் (துணைநிலை ஆளுநா்) சிங்கப்பூா் பயணத்திற்கு ஆலோசனை வழங்குவதில் தனது அதிகார வரம்பிற்கு அப்பால் செயல்பட்டது மட்டுமல்லாமல், மேலே குறிப்பிட்டுள்ள அலுவலக குறிப்பாணை மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் உண்மையான செயல்பாடானாது எதிா்மனுதாரா்களின் தன்னிச்சையான, தடையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற விருப்புரிமையைப் பிரதிபலிக்கிறது. இந்தக் குறிப்பிட்ட சிங்கப்பூா் பயணத்திற்கான அனுமதிகளை மறுத்ததற்கு முகாந்திர காரணமோ அல்லது அடிப்படையோ இல்லை என்று தோன்றுகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானதாக இருப்பதையே காட்டுகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எதிா்தரப்பினராக தில்லி துணைநிலை ஆளுநா், மத்திய அரசு, வெளியுறவு விவகார அமைச்சகம், நிதி, உள்துறை அமைச்சகங்கள், பிரதமா் அலுவலகம் ஆகியவை சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.