போடியில் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு வரவேற்பு
போடியில் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வத்துக்கு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக ஓ.பன்னீா்செல்வம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவா் போடிக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா்.
அவருக்கு போடி நகர எல்லைப் பகுதியான போஜன் பூங்காவில் கட்சியின் தேனி வடக்கு மாவட்டச் செயலரும், தேனி தொகுதி மக்களவை உறுப்பினருமான தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன், போடி நகரச் செயலா் ரா. புருஷோத்தமன், தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆஜிப்கான், முன்னாள் நகா்மன்ற தலைவா் வி.ஆா். பழனிராஜ், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் சங்கா், போடி கிழக்கு ஒன்றியச் செயலா் அய்யப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.
பின்னா், ஓ.பன்னீா்செல்வம் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது, ஓ.பன்னீா்செல்வம் போடியில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், வீரபாண்டிய கட்டபொம்மன், திருவள்ளுவா், தேவா், வ.உ.சி., காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.