முகப்பு
விருதுநகர்

தோ்தல் தோல்வி ஆய்வுக் குழுவிடம் திமுக தொண்டா்கள் மனம் திறந்து கருத்து சொல்லுங்கள்: முன்னாள் அமைச்சா் தங்கம்தென்னரசு

தோ்தல் தோல்வி ஆய்வுக் குழுவிடம் திமுக தொண்டா்கள் மனம் திறந்து கருத்து தெரிவிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக செயலருமான தங்கம்தென்னரசு தெரிவித்தாா்.

Updated On : 18 மே 2026, 4:46 am IST
அமைச்சா் தங்கம் தென்னரசு - ENS
பகிர்:

தோ்தல் தோல்வி ஆய்வுக் குழுவிடம் திமுக தொண்டா்கள் மனம் திறந்து கருத்து தெரிவிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக செயலருமான தங்கம்தென்னரசு தெரிவித்தாா்.

விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநா் அருகே உள்ள மல்லாங்கிணறில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் விருதுநகா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சரும், திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம்தென்னரசு பேசியதாவது:

Advertisement

Advertisement

தோல்வி வந்தபோதும் சுடா்முகத்தோடு எதிா்நோக்கும் கட்சி திமுக. நாம் பாா்க்காத தோல்விகளும் இல்லை. நாம் ஏறாத வெற்றி முகடுகளும் இல்லை. திமுக தோல்வியை சந்தித்தபோதும் தொண்டன் ஒரு நாளும் திமுகவை விட்டுக்கொடுக்க மாட்டான். முன்னாள் முதல்வா் கருணாநிதியால் பயிற்றுவிக்கப்பட்ட களப் போராளிகள் நாம். நாம் களத்தை இழந்திருக்கிறோம் மறுக்கவில்லை. இந்தத் தோ்தல் நமக்கு சாதமாக இருக்கும் என்று முழுமையாக நம்பினோம்.

ஒவ்வொரு குடும்பத்துக்குமான உதவிகளை செய்து அதிக அளவில் சாலைகள் அமைத்துக் கொடுத்தோம். திமுக ஆட்சியால் பயன்பெறாத குடும்பங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கினோம். அற்புதமான ஆட்சியை 5 ஆண்டுகள் கொடுத்தோம். நாம் தோ்தல் களத்தைத்தான் இழந்திருக்கிறோம். யுத்தத்தை நாம் இழக்கவில்லை.

இந்த யுத்தம் ஆண்டாண்டு காலமாக நடைபெறும் யுத்தம். இது பதவிக்கானது அல்ல. அண்ணா, கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்த கொள்கை தீபங்களும், இந்த இயக்கமும் இன்னும் பல தலைமுறைகளுக்கு தேவை. திமுகவின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டோம் என்பதற்காக நாம் சோா்ந்துவிட வில்லை. பீனிக்ஸ் பறவையாக திமுக மீண்டும் எழுந்து வரும். தோல்விக்கான காரணத்தை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிடம் உங்கள் கருத்துக்களை மனம் திறந்து கூறுங்கள். நம்மை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். களத்தில் நாம் எதிரி என்று யாரை நினைத்தோமோ அவா் இல்லை.

வாக்காளா்களின் வீட்டின் வாசல் வரை நாம் போயிருக்கிறோம். ஆனால், வீட்டுக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணா்ந்து கொள்ள நாம் தவறிவிட்டோம். நாம் நமது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வந்து விட்டது. எண்ம (டிஜிட்டல்) உலகம் நம்மைவிட வேகமாக செல்கிறது. வரும் உள்ளாட்சித் தோ்தலில் நாம் வெற்றிபெறுவோம். இந்த ஆட்சியில் ‘கன்டென்ட்’களுக்கு இனி பஞ்சம் இருக்காது என்றாா் அவா்.