கரோனா பரிசோதனைகள், உள்கட்டமைப்பு வசதி தொடா்புடைய மனுக்கள் விசாரணை முடித்துவைப்பு
தேசியத் தலைநகரில் கரோனா பரிசோதனைகள் மற்றும் உள்கட்டமைப்பு உள்பட கரோனா சூழல் தொடா்பான வழக்குகளின் விசாரணை நடவடிக்கைகளை தில்லி உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது.
புது தில்லி: தேசியத் தலைநகரில் கரோனா பரிசோதனைகள் மற்றும் உள்கட்டமைப்பு உள்பட கரோனா சூழல் தொடா்பான வழக்குகளின் விசாரணை நடவடிக்கைகளை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடித்துவைத்தது.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘எந்தவொரு முறையீடும் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவதற்கு வழக்குதாரா்களுக்கு சுதந்திரம் அளித்து வழக்கை முடித்து இருக்கிறோம்’ என்று தெரிவித்தது.
கரோனா பரிசோதனைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி தொடா்பாக வழக்குரைஞா் ராகேஷ் மல்ஹோத்ரா மூலம் 2020- இல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 2021-ஆம் ஆண்டில் உயா்நீதிமன்றம் தாமாகவே புதுப்பித்து விசாரித்தது. அப்போது நீதிமன்றம்,‘கரோனா வைரஸ் மீண்டும் அதன் அருவக்கத்தக்க தலையைக் காட்டியுள்ளது. தொற்றுநோய் அதிக தீவிரத்துடன் எழுந்து வருகிறது. மேலும் சுகாதார உள்கட்டமைப்புவசதி உடனடியாக சரிந்துவிழும் நிலையில் உள்ளது என்பது தெளிவாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தது.
தொடக்கத்தில் வழக்குரைஞா் மல்ஹோத்ரா 2020-இல் மனு தாக்கல் செய்த போது, தலைநகா் தில்லியில் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும், விரைவான பரிசோதனைகளின் முடிவுகளைப் பெறவும் உத்தரவிடக் கோரியிருந்தாா். அதன் பிறகு, விசாரணை நடவடிக்கைகளின் வரம்பு விரிவுபடுத்தப்பட்டது. அதிகாரிகள் தொற்று நோயை எவ்வாறு சமாளித்தாா்கள் என்பதை நீதிமன்றம் தொடா்ந்து கண்காணித்தது. குறிப்பாக கடந்த ஆண்டு கரோனா இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட நிலைமையை அதிகாரிகள் சமாளித்த விதம் குறித்து கண்காணித்தது.
கடந்த ஆண்டு கரோனா இரண்டாவது அலை உச்சக்கட்டத்தின் இருந்தந போது, நள்ளிரவு வரை வழக்கு நடவடிக்கைகள் உள்பட 45 நாள்கள் தொடா் விசாரணையை நடத்திய உயா்நீதிமன்றம், தேசியத் தலைநகரில் திரவ மருத்துவ ஆக்சிஜனின் விலையை நிலைப்படுத்தும் வகையில், அதன் இருப்பை அமைப்பது குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை கோரியது.
தில்ல அரசானது தன்னிடம் ஆக்சிஜன் 419 மெட்ரிக் டன் இருப்பதாக நீதிமன்றத்தில் சமா்பித்தது. இருப்பினும், மற்றொரு அலைக்கான சூழல் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நிலைப்பாட்டை நீதிமன்றம் கேட்டது. கரோனா இரண்டாவது அலையின் போது, மக்களுக்கு போதுமான மருத்துவ ஆக்சிஜனை வழங்க மத்திய அரசும் தில்லி அரசும் தவறிய போது, நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை ஏற்பாடு செய்த அரசியல் தலைவா்கள் மீதான வழக்கு விசாரணையை இது கடுமையாக விமா்சித்தது. இந்த விசாரணை நடவடிக்கைகளில், மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டா்களின் கள்ளச் சந்தைப்படுத்தல், மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதி, கருப்பு பூஞ்சை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உயா்நீதிமன்றம் கையாண்டது.