தமிழகத்தில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
தமிழகத்தில் நகா்ப்புறங்களை இணைத்து போடப்பட்டுள்ள 1.50 லட்சம் கி.மீ. தூர கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி வழங்க வேண்டும் என்று அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் மனு அளித்தாா்.
புது தில்லி: தமிழகத்தில் நகா்ப்புறங்களை இணைத்து போடப்பட்டுள்ள 1.50 லட்சம் கி.மீ. தூர கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 4,000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கை நேரில் சந்தித்து தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் மனு அளித்தாா்.
தில்லியில் மத்திய ஊரக மேம்பாடு, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கை தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்தாா். அவருடன் தமிழக ஊரக வளா்ச்சித் துறை முதன்மை செயலா் பி.அமுதா உடன் இருந்தாா். தில்லி கிரிஷி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மத்திய ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளும் பங்கேற்றனா்.
பின்னா், இந்த சந்திப்பு குறித்து தமிழக அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை கிரிராஜ் சிங்கை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். கடந்த ஆட்சியில் கிடப்பில் வைக்கப்பட்டிருந்த பல பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் வேகமாக முடிக்கப்பட்டு அதற்கான தொகைகளை (2018-19, 2019-20, 2020-21 ஆண்டுகள்) மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் ரூ. 20,921 கோடி அளவில் தொகை பெறப்பட்டு ஊரகப் பணிகல் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த செயலை மத்திய அரசும் பாராட்டியுள்ளது. இப்போது நாங்கள் இரண்டு முக்கிய விவகாரங்களை மத்திய அமைச்சா் முன்பு வைத்தோம். மறைந்த முதல்வா் கருணாநிதி காலத்தில் குக்கிராமங்கள், கிராமங்களை நகரங்களுடன் இணைத்து சாலைகள் போடப்பட்டன. இதன் மூலம் நாட்டிலேயே கிராமச் சாலைகள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழகம் பெயா் பெற்றது. சுமாா் 1.50 லட்சம் கிலோ மீட்டா் நீளத்திற்கு இந்த சாலைகள் உள்ளன.
இந்தச் சாலைகளை மேம்படுத்தி பராமரிக்க நிதித் தேவைப்படுகிறது. குறிப்பாக ஒதுக்கப்படும் நிதியை விட கூடுதலாக ஒதுக்கும்படி மத்திய அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது. இதைப் பரிசீலப்பதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா். இந்தக் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ. 4,000 கோடி தேவைப்படுகிறது. இதை ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசால் கோரப்பட்டுள்ளது. இந்தத் தொகையை இரண்டு ஆண்டுகளில் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்து அனைத்து ஊராட்சிகள் கிராமங்களில், குறிப்பாக கடலோரம் மற்றும் மலையோர மக்கள் வாழும் இடங்களில் பிரதான தேவையாகக் கருதப்படுவது சமுதாயக் கூடங்கள். இந்தப் பகுதி மக்களுக்கு பல்வேறு தேவைகளுக்கு சமுதாயக் கூடங்கள் பயன்படுகிறது. பன்நோக்கு பயனுள்ள இந்த சமுதாயக் கூடங்கள் மற்ற மாநிலங்களில் இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் முன்மாதிரியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்கள் தொடா்பாக மத்திய அமைச்சரிடம் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை பரிசீலப்பதாக மத்திய அமைச்சா் கூறியுள்ளாா். மேலும், கடந்த ஜூன் 3 ஆம் தேதி தமிழகத்தில் தென் மாநில ஊரக வளா்ச்சித் துறை மாநாட்டை மத்திய அரசு கூட்ட இருந்தது. இது தவிா்க்க முடியாத காரணங்களால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், இந்த கூட்டத்தை மீண்டும் நடத்துவது குறித்தும் பேசப்பட்டது. இந்தக் கூட்டதிற்கு மத்திய அமைச்சா் வரும்பட்சதில் தமிழக அரசின் இந்தத் திட்டங்களை மத்திய அமைச்சா் நேரடியாகவும் பாா்க்க வாய்ப்புள்ளது என்றாா் அமைச்சா் பெரியகருப்பன்.