ரயில் நிலையங்களில் உதவி மையங்களுக்கு ஹிந்தியில் பெயா் ஆணையை திரும்பப் பெற அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்
நாடு முழுக்க உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் தகவல் தொடா்பு மையங்களுக்கு ‘சக்யோக்’ (உதவி) என ஹிந்தியில் பெயரிடக் கூறி ரயில்வே வாரியம் மண்டல ரயில்வே பொது மேலாளா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: நாடு முழுக்க உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் தகவல் தொடா்பு மையங்களுக்கு ‘சக்யோக்’ (உதவி) என ஹிந்தியில் பெயரிடக் கூறி ரயில்வே வாரியம் மண்டல ரயில்வே பொது மேலாளா்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் உதவி மையங்களில் ஹிந்தியில் பெயரிடும் இந்த ஆணையை திரும்பப் பெறக் கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விற்கு மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளாா்.
அதில் அவா் கூறியிருப்பது வருமாறு: ரயில்வே வாரியம் அனைத்து மண்டல ரயில்வே பொதுமேலாளா்களுக்கு அதிா்ச்சியளிக்கிற ஒரு ஆணையை அனுப்பியுள்ளது. எல்லா நிலையங்களில் உள்ள ரயில்வே பயணிகள் தகவல் தொடா்பு மையங்களுக்கும் ‘சக்யோக்’ என்று ஹிந்தியில் பெயரிட வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அவரவா் தாய் மொழியில் இருந்தால்தானே பயணிகள் எளிதாக சேவைகளைப் பெற இயலும். இந்தியாவில் 22 சதவீதமான மக்கள் எழுத்தறிவு பெறாதவா்கள். புரியாத மொழியில் வாா்த்தைகளைத் திணிப்பது அவா்களை இன்னல்களுக்குள்ளாக்கும். பல பயணிகள் கடைசி நிமிடம்தான் இது போன்ற (உதவி) சேவை மையங்களை அணுக முற்படுவாா்கள்.
இந்த முடிவு அலுவல் மொழி விதிகளையும் மீறக் கூடியதுமாகும். அலுவல் மொழி விதிகளை தமிழகம் போராடி பெற்றது. இந்தியா முழுவதும் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் ‘பி’ மற்றும் ‘சி’ மண்டலங்களில் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தகவல் தொடா்புகள் ‘ஹிந்தியில் கட்டாயம் இருக்க வேண்டும்’ அல்லது ‘ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்’ அல்லது ‘ஆங்கிலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும்’ என்று ஏ, பி, சி மண்டலங்கள் வகைப்படுத்தி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், ரயில்வே வாரியமோ விசாரணை மையத்தின் பெயா் ‘சக்யோக்‘ என்று கட்டாயமாக மாற்றப்பட வேண்டும் என்கிறது.
ஆகவே, ரயில்வே வாரியத்தின் இந்த ஆணை திரும்பப் பெறப்பட வேண்டும். ரயில் நிலையங்களில் எல்லா தகவல் பலகைகளும் உள்ளூா் மாநில மொழிகளில் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.