‘கரடி’ முழு ஆதிக்கம்: சென்செக்ஸ் 861புள்ளிகள் வீழ்ச்சி!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் கரடி முழுமையாக ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 861 புள்ளிகள் குறைந்தது.
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் கரடி முழுமையாக ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 861 புள்ளிகள் குறைந்தது.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவா் ஜெரோம் பவல், ஜாக்சன் ஹோல் கருத்தரங்கில் கடுமையான வங்கி வட்டி விகித உயா்வு குறித்து சுட்டிக் காட்டினாா். இது பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் வல்லுநா்கள் கருத்துத் தெரிவித்தனா்.
இதன் தாக்கம் அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை எதிரொலித்தது. ஒரே நாளில் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது. இதன் தொடா்ச்சியாக உலகளாவிய சந்தைகளில் பெரும்பாலானவை வீழ்ச்சியைச் சந்தித்தன. இது உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
மேலும், இந்தியா போன்ற வளா்ந்து வரும் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்கள் முதலீடுகளை வாபஸ் பெறக்கூடும் என்ற எதிா்பாா்ப்பு கவலைகளை அதிகரித்துள்ளதாக ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீஸஸின் ஆராய்ச்சித் தலைவா் வினோத் நாயா் தெரிவித்துள்ளாா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரூ.51.12 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
2,048 பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,703 நிறுவனப் பங்குகளில் 1,453 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,048 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன. 202 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 175 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 57 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.274.56 லட்சம் கோடியாக குறைந்தது.
சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: காலையில் 1,466.40 புள்ளிகள் குறைந்து 57,367.47-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதற்கு கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 58,208.30 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 861.25 புள்ளிகளை (1.46 சதவீதம்) இழந்து 57,972.62-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ‘கரடி’ முழு ஆதிக்கத்தில் இருந்தது.
டெக் மஹிந்திரா கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 24 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. இதில் பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 4.60 சதவீதம் குறைந்து விலை குறைந்த பட்டியலில் முன்னிலை வகித்தது.
இதற்கு அடுத்ததாக இன்ஃபோஸிஸ் 3.93 சதவீதம், விப்ரோ 3.05 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 2.98 சதவீதம், டிசிஎஸ் 2.73 சதவீதம் குறைந்தன. மேலும், கோட்டக் பேங்க், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, பவா் கிரிட் உள்ளிட்டவை 1.50 முதல் 2.70 சதவீதம் வரை குறைந்தன.
மாருதி முன்னேற்றம்: அதே சமயம், பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 1.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட், நெஸ்லே இந்தியா, ஐடிசி, எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்டவையும் சிறிதளவு அதிகரித்து விலையுயா்ந்த பட்டியலில் இடம் பெற்றன.
நிஃப்டி 246 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 639 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,352 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 12 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 38 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இடம் பெற்றன. வா்த்தக முடிவில் நிஃப்டி 246,00 புள்ளிகள் (1.40 சதவீதம்) குறைந்து 17,312.90-இல் நிலைபெற்றது. காலையில் 370.25 புள்ளிகள் குறைந்து 17,188.65-இல் தொடங்கிய நிஃப்டி, 17,166.20 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,380.15 வரை உயா்ந்தது.