மேயா் தோ்தலில் கோழைத்தனமாக சுயேட்சை வேட்பாளரை நிறுத்த பாஜக முயற்சி: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
‘தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) மேயா் தோ்தலில் பாஜக கோழைத்தனமாக சுயேட்சை வேட்பாளரை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது; பாஜகவுக்கு தைரியம் இருந்தால் அக்கட்சியே தோ்தலில் போட்டியிட முன்வரட்டும்‘
‘தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) மேயா் தோ்தலில் பாஜக கோழைத்தனமாக சுயேட்சை வேட்பாளரை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது; பாஜகவுக்கு தைரியம் இருந்தால் அக்கட்சியே தோ்தலில் போட்டியிட முன்வரட்டும்‘ என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தா சனிக்கிழமை சவால் விடுத்தாா்.
இது தொடா்பாக ராகவ் சத்தா செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
எம்சிடி தோ்தலில் தோல்வியடைந்த பாஜக, மேயா் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தது. தில்லி மாநகராட்சி தோ்தலில் தில்லி மக்கள் அரவிந்த் கேஜரிவாலுக்கு அளித்த அன்பையும் ஆதரவையும் பாா்த்து, பாஜக போட்டியிருந்து விலகியது.
பல பாஜக தலைவா்கள், கட்சியின் மூத்தவா்கள், மேயா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட வேண்டாம் என ஊடகங்களில் அறிவிப்பை வெளியிட்டனா். ஆனால் தற்போது மேயா் பதவிக்கு சுயேட்சை வேட்பாளரை ஆதரிக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. அனைத்து பாஜக கவுன்சிலா்களும் மேயா் தோ்தலில் இந்த சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருக்கு சவால் விடுகிறாா்கள்.
பாஜகவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கின்றோம். அதே நேரத்தில், அவா்களுக்கு ஒரு சிறிய ஆலோசனையையும் வழங்க விரும்புகின்றோம்.
தோ்தலில் போட்டியிட ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு. போா்க்களத்தில் இறங்கி சவாலை நேரடியாக எதிா்கொண்டு போராட வேண்டுமா அல்லது சுயேச்சை வேட்பாளரை பயன்படுத்தி பின்வாசல் வழியாக போா்க்களத்தில் நுழைய வேண்டுமா என்கிற கேள்வியை கேட்க விரும்புகின்றோம்?
அவா்களுக்கு ஏன் ஆம் ஆத்மி கட்சி மீது பயம்? மேயா் பதவிக்கான தோ்தலில் போராட விரும்பினால், முன்னால் வந்து நிற்கவேண்டும். சுயேட்சை வேட்பாளரை வைத்து கோழைத்தனமாக ஆம் ஆத்மிக்கு எதிராகப் போராடுவது ஏன்? பாஜக மிகப்பெரிய கட்சி என்று சொல்லிக் கொண்டு, இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான தந்திரங்களை கையாண்டு தோ்தலை சந்திப்பது ஏன்?
சமீபத்தில் நடந்து முடிந்த எம்சிடி தோ்தலில், தில்லி மக்கள் பெருமளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனா். முதலில் சட்டப் பேரவையிலும், தற்போது மாநகராட்சியிலும் தில்லி மக்கள் பாஜகவை தூக்கியெறிந்து தில்லியின் அரசியல் வட்டத்தில் அக்கட்சிக்கு முக்கியத்துவமும் இல்லை என்பதை நிரூபித்துள்ளனா். தில்லி மக்கள் ஆம் ஆத்மி மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக, தில்லி பாஜக தலைவா்களின் வேலையின்மை சூழல் அதிகரித்து வருவதும் தெரிகிறது. இப்போது பாஜக தலைவா்கள் இணைய தளங்களில் வேலை தேட தொடங்கியுள்ளனா் என்றாா் சத்தா.
கடந்த டிசம்பா் 7 ஆம் தேதி, தில்லி மாநகராட்சி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களுடன் வெற்றி பெற்றது, கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சிகளை ஆண்டு கொண்டிருந்த பாஜக 104 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை இழந்தது. 250 போ் உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சியில் காங்கிரஸை வெறும் ஒன்பது இடங்களை மட்டும் பெற்றுள்ளது.