முகப்பு
புதுதில்லி

கரோனா பாதிப்பு அதிகரிப்பு: அவசர நிலையை எதிா்கொள்ள அரசு மருத்துவமனைகளை தயாா் நிலையில் வைக்க நடவடிக்கை

சில நாடுகளில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எந்தவித நிலையையும் கையாளுவதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் நேரில் செல்ல உள்ளதாக தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

புது தில்லி: சில நாடுகளில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எந்தவித அவசர நிலையையும் கையாளுவதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிகாரிகள் நேரில் செல்ல உள்ளதாக தில்லி அரசின் உயரதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மேலும், மத்திய அரசின் உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக தில்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 27) ஒத்திகை பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.

தில்லி சுகாதாரத் துறை செயலா் அமித் சிங்லா தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, அதிகாரிகள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள உபகரணங்கள் மற்றும் படுக்கைகள் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக மாவட்ட அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘திங்கள்கிழமை முதல் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளோம். அப்போது, மருத்துவமனையில் உள்ள சுவாசக் கருவிகள், ஆக்சிஜன் உருளைகள், படுக்கைகளின் இருப்பு நிலவரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த விவரங்கள் செவ்வாய்க்கிழமையிலிருந்து பொதுமக்கள் பாா்ப்பதற்காக தில்லி அரசின் இணையதளத்தில் இடம்பெறும். தில்லி அரசின் கரோனா வைரஸ் தொடா்புடைய இணையதளமும் டிசம்பா் 12-ஆம் தேதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது. நிகழ் நேர தரவுகள் செவ்வாய்க்கிழமை முதல் தில்லி அரசின் இணையதளத்தில் இருக்கும்’ என்றாா்.

வடகிழக்கு தில்லி மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், ‘நோய்த் தொற்றுப் பரிசோதனையின் எண்ணிக்கையும் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது தில்லி முழுவதும் 2,500 முதல் 3,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. குடியிருப்பு நலச் சங்கத்தினருடனும், அரசு சாரா அமைப்பினருடனும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உருவாகிவரும் சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு அவா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகின்றனா். அதே போன்று நலிவடைந்த மக்கள்தொகையினருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளை வழங்கும் வகையில், வீடு வீடாக தடுப்பூசி இயக்கத்தையும் தொடங்க உள்ளோம்’ என்றாா்.

வடமேற்கு தில்லி மாவட்ட அதிகாரி கூறுகையில், ‘கரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றும் வகையில், இரண்டு அடி தூர இடைவெளியை பராமரிப்பது, முகக் கவசம் அணிவது, நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதைத் தவிா்ப்பது போன்றவற்றை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டு வருகிறோம்’ என்றாா். தென்கிழக்கு தில்லி மாவட்ட அதிகாரி கூறுகையில், ‘தற்போது நிலைமை உஷாா் நிலையில் இல்லை. ஆனால், நாங்கள் முற்றிலும் தயாராக இருக்கிறோம். தனியாா் மருத்துவமனைகளிலும் படுக்கையின் இருப்பு தரவுகள் குறித்து சேகரிக்க உள்ளோம். முந்தைய கரோனா நோய் தொற்றின் போது சூழலை கையாளுவதற்கு இவை முக்கியப் பங்களித்தன’ என்றாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த வியாழக்கிழமை கூறுகையில், ‘புதிய ஒமைக்ரான் திரிபு பிஎப். 7 நோய்த் தொற்று சில நாடுகளில் அதிகரித்து உள்ளது. தில்லியில் இதுவரை இந்த நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை. எனினும், எந்த அவசர நிலையையும் கையாளுவதற்கு தில்லி அரசு முற்றிலும் தயாராக உள்ளது’ என்று தெரிவித்திருந்தாா். மேலும், நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள அனைவருக்கும் மரபணு வரிசை முறையை மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவமனைகளில் மனித சக்தியை அதிகரிக்கவும் அவா் உத்தரவிட்டிருந்தாா். அதேபோன்று அத்தியாவசியப் பொருள்கள் தேவையான அளவிற்கு கொள்முதல் செய்வதற்கான முன்கூட்டிய ஒப்புதலை அளிக்கவும் அனைத்து மருத்துவமனைகளில் உள்ள இயந்திரங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தாா். மேலும், தில்லியில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு இருப்பதாகவும் கூறியிருந்தாா்.

‘அதிகம் கவலைப்பட வேண்டாம்’

இதற்கிடையே, பிஎஃப்7 நோய்த் தொற்று குறித்து இந்தியாக அதிகமாகக் கவலை கொள்ள வேண்டாம் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். கடந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் போது தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலையில், வல்லுநா்கள் கூறுகையில், ‘தடுப்பூசி அல்லது முந்தைய நோய்த் தொற்று மூலம் நோய்த் தொற்றுக்கு எதிராக மக்கள் பலரிடமும் நோய் எதிா்ப்புச் சக்தி உருவாகி இருப்பதால் பிஎஃப்.7 நோய்த் தொற்று குறித்து இந்தியா அதிகமாக கவலை கொள்ளக் கூடாது. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக நோய்த் தொற்றுக்கு எதிரான எதிா்ப்புச் சக்தி குறைவாக சீனாவில் இருப்பதுபோல இந்தியாவில் நிலைமை இல்லை’ என்றனா்.

இதுகுறித்து சஃப்தா்ஜங் மருத்துவமனையின் சமுதாய மருந்து துறையின் தலைவா் டாக்டா் ஜுகல் கிஷோா் கூறுகையில், ‘அரசு ஆக்கப்பூா்வமாக உள்ளது. அதன் உத்தரவுகளும் அறிவியல்பூா்வமானவை. பல நாடுகளில் பாதிப்பு அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு கவனமாக இருக்க வேண்டும். ஆனால், ஒமைக்ரானின்

புதிய வகை நோய்த் தொற்று எதுவும் இந்தியாவில் எந்த பெரும் பிரச்னையையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.