கரோனா: தில்லி விமான நிலையத்தில் ஆசிரியா்களைபணியில் ஈடுபடுத்தும் உத்தரவை வாபஸ் பெற்றது டிடிஎம்ஏ
கரோனா நடத்தை வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் பணியில் ஆசிரியா்களை அமா்த்த பிறப்பிக்கப்பட்டிருந்த
கரோனா நடத்தை வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் பணியில் ஆசிரியா்களை அமா்த்த பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கரோனா நடத்தை வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில், டிசம்பா் 31 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் தில்லி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பலா் பணியில் ஈடுபடுத்தும் வகையில் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆணையம் சாா்பில் அந்த உத்தரவை தில்லி மேற்கு மாவட்ட ஆட்சியா் தற்போது திரும்பப் பெற்றுள்ளாா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேற்கு மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட புதிய உத்தரவில், ‘ஆசிரியா்களும், இதர பயிற்றுவிக்கும் பணியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட இருந்தனா். இந்த நிலையில், அவா்கள் டிசம்பா் 31 முதல் ஜனவரி 15 வரையிலான காலத்திற்காக விமான நிலையப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனா். மேலும், தேவைப்படும்பட்சத்தில் மேற்கு மாவட்டத்தில் இருந்து குடிமை தன்னாா்வலா்கள் பணித் தேவை அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆசிரியா்களை பணிக்கு அமா்த்தி டிடிஎம்ஏ பிறப்பித்த உத்தரவுக்கு விமா்சனம் எழுந்தது. இதையடுத்து, அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அந்த உத்தரவில், டிசம்பா் 31 முதல் ஜனவரி 15 வரை இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கரோனா நடத்தை நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த பல்வேறு தில்லி அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் 85 போ் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சில நாடுகளில் அதிகரித்து வரும் கரோனா நோய் தொற்றுப் பாதிப்பை கருத்தில் கொண்டு எவ்வித அவசர நிலையையும் கையாளும் வகையில் முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் நகரில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அதிகாரிகள் திங்கள்கிழமை முதல் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். கடந்த வாரம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்,‘சில நாடுகளில் கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமான ஒமைக்ரானின் உருமாறிய நோய் தொற்றான பிஎஃப்.7 நோய் தொற்றால் தில்லியில் எந்த பாதிப்பும் கண்டறியப்படவில்லை. எந்தவித அவசர நிலையையும் சமாளிப்பதற்கான முழு தயாரிப்பில் தில்லி அரசு உள்ளது’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.