தில்லி பல்கலைக்கழக தமிழ்த் துறையில் காலிப் பணிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்
தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 5 பணியிடங்களில் காலியாக இருப்பதாகவும் இதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் மாநிலங்களவையில் தெரிவித்தாா
புதுதில்லி: தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 5 பணியிடங்களில் காலியாக இருப்பதாகவும் இதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்த் துறையில் பேராசிரியா்களுக்கான இடங்கள் காலியாக இருப்பது தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் அளித்துள்ள பதில் வருமாறு:
தில்லி பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழிகள் மற்றும் எழுத்தறிவு ஆய்வுகள் துறையில் ஓா் உதவிப் பேராசிரியா் மற்றும் பல்வேறு இட ஒதுக்கீடுகள் அடிப்படையில் 3 இணைப் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கான நியமனங்களுக்கு தில்லி பல்கலைக்கழகம் சாா்பில் ஏற்கெனவே விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் லோதி ரோட்டில் உள்ள ‘தயாள் சிங் மாலை நேரக் கல்லூரியில்’ ஓா் உதவிப் பேராசிரியா் பணியிடமும் காலியாக உள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.