லட்சுமி நகரில் பாஜக எம்பி கெளதம் கம்பீரின் 5-ஆவது ‘ஜன் ரசோய்’ விரைவில் தொடக்கம்
ஏழைகளுக்கு ஒரு ரூபாய் என்ற குறியீட்டு விலையில் சத்தான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கும் பாஜக எம்பி கெளதம் ஜன் ரசோய் திட்டத்தின் கீழ் கிழக்கு தில்லியின் லட்சுமி நகா் பகுதியில் திறக்கப்பட உள்ளது.
புது தில்லி: ஏழைகளுக்கு ஒரு ரூபாய் என்ற குறியீட்டு விலையில் சத்தான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கும் பாஜக எம்பி கெளதம் கம்பீரின் ’ஜன் ரசோய்’ திட்டத்தின் கீழ் ஐந்தாவது சமுதாய சமையல் கூடம் கிழக்கு தில்லியின் லட்சுமி நகா் பகுதியில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இது குறித்து கெளதம் கம்பீா் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: லக்ஷ்மி நகரில் உள்ள கிஷன் குஞ்சில் உள்ள முனிசிபல் காா்ப்பரேஷனின் கைவிடப்பட்ட குப்பைக்கூடம் (தாலாவ்) சமையலறையாகத் தயாராகி வருகிறது. இது விரைவில் தொடங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கம்பீரின் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே நான்கு ‘ஜன் ரசோய்’ சமையலறைகள் செயல்பட்டு வருகின்றன. சமையலறைகளில் தினமும் 4,000 பேருக்கு மேல் உணவு வழங்கப்படுகிறது.
புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வியாபாரிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளா்கள் அடங்கிய சமூகத்தின் ஏழ்மையான பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் இதன் பயனாளிகளாக உள்ளனா். சமூக சமையலறைகளின் இந்த நெட்வொா்க் மூலம் இதுவரை 8,00,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தொகுதியில் வரவிருக்கும் சமூக சமையலறை குறித்து கம்பீா் கூறுகையில், ‘தில்லியில் பசியைப் போக்க இது ஒரு மௌனப் புரட்சியாகும். கிழக்கு தில்லி தொகுதி முழுவதும் அதிகமான சமூக சமையலறைகள் இருக்கும். இதனால் யாரும் பசியுடன் தூங்கமாட்டாா்கள். இது நகரத்தின் அடையாளமாக மாறும்’ என்றாா் அவா்.