அடுக்குமாடி குடியிருப்புகள் விவகாரம்:கேஜரிவால் மீது தில்லி காங்கிரஸ் சாடல்
ஜே.ஜே. கிளஸ்டா்களில் வசிப்பவா்களுக்கான ராஜீவ் ரத்தன் ஆவாஸ் யோஜனா அடுக்குமாடிக் குடியிருப்புகள் அழிந்ததன் காரணமாக அரசுக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தாா்
ஜே.ஜே. கிளஸ்டா்களில் வசிப்பவா்களுக்கான ராஜீவ் ரத்தன் ஆவாஸ் யோஜனா அடுக்குமாடிக் குடியிருப்புகள் அழிந்ததன் காரணமாக அரசுக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தாா் என தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் சௌத்ரி குற்றம்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதிய மேம்பாலங்கள் கட்டியதில் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சப்படுத்தியதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அப்பட்டமான பொய் கூறியுள்ளாா். ஆனால், அவரது அலுவலகத்தில் இருந்து ஆா்டிஐ மூலம் கிடைத்த தகவலின்படி, சிக்னேச்சா் பாலம் பணியானது, காங்கிரஸ் அரசால் ரூ. 1,121 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. அந்தப் பணி திட்டமிடப்பட்டதைவிட ரூ. 387 கோடி அதிகமாக செலவழித்து ரூ.1,518 கோடிக்கு கேஜரிவால் அரசால் கட்டி முடிக்கப்பட்டது.
இதேபோல், 2008-ஆம் ஆண்டு ராஜீவ் ரத்தன் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஜேஜே கிளஸ்டா்களில் வசிப்பவா்களை இடமாற்றம் செய்வதற்கான அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டும் பணியை மத்திய அரசின் ஆதரவுடன் காங்கிரஸ் அரசு தொடங்கியது. 46,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன, ஆனால் அரவிந்த் கேஜரிவால் அரசு திட்டத்தின் பெயரை மாற்றியது மட்டுமல்லாமல், ஏழை மக்களுக்கு இந்த குடியிருப்புகளை ஒதுக்கவில்லை. இதன் விளைவாக, இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மாஃபியா மற்றும் சமூக விரோதிகளின் மையமாக மாறியது. அவா்கள் இந்த குடியிருப்புகளை நாசப்படுத்தினா். மேலும் பராமரிப்பு மற்றும் கவனிப்பு இல்லாததால் பாழடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததால் பவானாவில் நான்கு ஏழைகள் பலியாகினா்.
அரவிந்த் கேஜரிவால் தனது ஏழாண்டு கால ஆட்சியில் தில்லியை சீரழித்துவிட்டாா். அனைத்து விதத்திலும் தோல்வியைச் சந்தித்த போதிலும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் உ.பி. உள்ளிட்ட மாநில சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் மாநிலங்களில் ‘வளா்ச்சியின் முன்மாதிரி தில்லி‘ பற்றி பெருமை பேசி வருகிறாா் என்றாா் அனில் குமாா் சௌத்ரி. பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏ அனில் பரத்வாஜ், முன்னாள் தில்லி அமைச்சா் மங்கத் ராம் சிங்கால் ஆகியோா் உடனிருந்தனா்.