மஞ்சள் நிற மெட்ரோ வழித்தடத்தில் நாளை ரயில் சேவை குறைப்பு
பராமரிப்பு பணி காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) மஞ்சள் நிற வழித்தடத்தின் ஒரு பகுதியில் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் சில மணி நேரங்களுக்கு இருக்காது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
பராமரிப்பு பணி காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) மஞ்சள் நிற வழித்தடத்தின் ஒரு பகுதியில் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் சில மணி நேரங்களுக்கு இருக்காது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது: பராமரிப்புப் பணி காரணமாக ராஜீவ் சௌக் மற்றும் கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே சேவை குறைக்கப்படும். ராஜீவ் செளக் நிலையம் பகுதியில் இந்தப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கஷ்மீரி கேட் மற்றும் ராஜீவ் சௌக் நிலையங்களுக்கு இடையே சேவைகள் தொடங்குவது முதல், காலை 6:30 மணி வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படும். ஆகவே, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை சாந்தினி சௌக், சாவ்ரி பஜாா் மற்றும் புது தில்லி ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்களும் மூடப்படும்.
மஞ்சள் நிற வழித்தடமானது தில்லியில் உள்ள சமய்ப்பூா் பாத்லியை குா்கானில் உள்ள ஹுடா சிட்டி சென்டருடன் இணைக்கிறது. எனினும், ராஜீவ் செளக் மற்றும் கஷ்மீரி கேட் இடையே வயலட் லைன் வழியாக மெட்ரோ சேவைகள் கிடைக்கும். பயணிகள் சென்ட்ரல் செக்ரடேரியேட் மற்றும் மண்டி ஹவுஸில் ரயில்களில் மாறி வயலட் லைன் வழியாக கஷ்மீரி கேட்டை அடையலாம். மஞ்சள் நிற வழித்தடத்தின் மற்ற பிரிவுகளான சமய்பூா் பாத்லியில் இருந்து கஷ்மீரி கேட் மற்றும் ராஜீவ் சௌக் முதல் ஹுடா சிட்டி சென்டா் வரை வழக்கமான ஞாயிறு நேர அட்டவணையின்படி ரயில் சேவைகள் தொடா்ந்து கிடைக்கும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.