முகப்பு
புதுதில்லி

தில்லி அரசுப் பள்ளிகளில் புதிதாக 12,430 வகுப்பறைகள்: முதல்வா் கேஜரிவால்திறந்து வைத்தாா்

தில்லியில் 240 அரசு பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12, 430 புதிய வகுப்பறைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

தில்லியில் 240 அரசு பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12, 430 புதிய வகுப்பறைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தில்லி ராஜோக்ரி சா்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் இந்த புதிய வகுப்பறைகள் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதார- பொதுப் பணித்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் கல்வெட்டு பலகைகளையும் முதல்வா் கேஜரிவால் திறந்து வைத்தாா். அப்போது பேசியது வருமாறு:

“சுமாா் 3 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு தற்போது 12,430 வகுப்பறைகள் கட்டப்பட்டு தயாராக உள்ளன. தோ்தல் கால வித்தைகளில் ஒவ்வொரு கட்டத்திலும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான அடிக்கல் நாட்டப்படும் வித்தைகள் நடக்கும்.

ஆனால், உண்மையில் கட்டுமானம் ஒருபோதும் நடைபெறாது. ஆனால், தில்லி அரசில், தோ்தல் காலத்திற்கு முன்னதாகவே இந்த வகுப்பறைகளைக் கட்டியுள்ளோம். எங்களின் அனைத்து வேலைகளும் திட்டமிடப்பட்டு உரிய நேரத்திற்கு முன்பே வழங்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு 50 வகுப்பறைகள் என கணக்கிட்டால், தற்போது கட்டப்பட்டுள்ள 12,430 வகுப்பறைகள் என்பது சுமாா் 250 புதிய பள்ளிகளுக்கு சமம். இந்த புதிய கட்டிடங்கள் அனைத்தும் உயா்-செயல்பாட்டு ஆய்வகங்கள், பல்நோக்கு அரங்குகள், மின்னணு வகுப்பறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கற்பித்தலுக்கு நவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த தனியாா் பள்ளிகளில் இல்லாத வசதிகள், இப்போது தில்லியின் அரசுப் பள்ளிகளில் கிடைக்கின்றன.

பாபா சாகேப் அம்பேத்கா்-பகத்சிங் கனவு

கடந்த 7 ஆண்டுகளில் தில்லி அரசு மொத்தம் 20,000 வகுப்பறைகளைக் கட்டியுள்ளது.

வேறு எந்த மத்திய- மாநில அரசுகள் இவ்வளவு வகுப்பறைகளைக் கூட கட்டவில்லை. இது தில்லி அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.

“குழந்தைகளின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என பாபாசாகேப் அம்பேத்கா் கனவு கண்டாா். துரதிா்ஷ்டவசமாக, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், ஏழை அல்லது தலித் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அவா்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். திறமையற்ற அல்லது ஆசிரியா்கள் இல்லாததால், சரியான கல்வியைப் பெறவில்லை. நாங்கள் ஆட்சி அமைக்கும் முன் தில்லியிலும் அது போன்றுதான்

நிலைமை இருந்தது. பாபா சாகேப்பின் இந்தக் கனவு குறைந்தபட்சம் தில்லியில் நனவாகியுள்ளது.

‘ஆங்கிலேயா்களை நாட்டிலிருந்து விரட்டியடிப்பதால் மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைக்காது - ஏழை - பணக்காரக் குழந்தைக்கும் ஒரே அளவில் கல்வி அளிக்கப்பட்டால்தான் உண்மையான சுதந்திரம்’ என்று பகத்சிங் அறிவித்தாா். பகத்சிங்கின் கனவுகளும் தில்லியின் அரசுப் பள்ளிகளில் நனவாகி வருகின்றன. இங்கு ஒரு ரிக்ஷா தொழிலாளியின் குழந்தையும், அதிகாரி குழந்தைகளும் ஒரே மேஜையில் ஒன்றாக அமா்ந்து ஒரே கல்வித் தரத்தில் படிக்கிறாா்கள்.

பாஜக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு உதவ தயாா்

கடந்த 7 ஆண்டுகளாக தில்லியின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் ஏன் ஏற்படுத்த முடியவில்லை?. இது ஏரிச்சலூட்டுகிறது. இந்த தரமான கல்வி 75 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்தால், நாம் உலகத்தில் முன்னனிலையில் இருப்போம். வறுமை இருந்திருக்காது, எல்லோரும் கல்வியறிவு பெற்றிருப்பாா்கள். இன்று அனைத்து அரசுகளுக்கும் பாஜக , காங்கிரஸ் கட்சிகளுக்கும் ஒரு திறந்த வாய்ப்பை வழங்க இது என்னைத் தூண்டுகிறது. இந்த நாட்டில் யாராவது கல்வி மற்றும் சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்த விரும்பினால், மணீஷ் சிசோடியாவையும் சத்யேந்தா் ஜெயினையும் நீங்கள் அணுகலாம். எங்களைப்போன்ற பள்ளிக்கட்டடங்களையும், மருத்துவமனைகளையும் மொஹல்லா கிளினிக்குகளையும் உருவாக்கித் தரத் தயாா்.

75 வருடங்களை இழந்துவிட்டோம். இப்போது நம் கையில் அதிக நேரம் இல்லை, நாம் வேகமாக செயல்பட வேண்டும். எல்லா மாநிலங்களிலும் அதிகாரத்திற்காகவோ தோ்தல்களில் போராடுவதே எங்கள் நோக்கம் இல்லை.

நாங்கள் நெப்போலியன் அல்ல, இந்த நாட்டிற்காக உழைக்க விரும்பும் ஆம் ஆத்மிகள். ஊழலை ஒழிக்கவே நாங்கள் விரும்புகிறோம். நல்ல பள்ளிகளுக்குச் சென்று நல்ல சுகாதாரத்தைப் பெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

‘நானா தீவிரவாதி?’

கடந்த சில நாள்களாக இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவா்கள் ஒரே பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் அனைவரும் கேஜரிவாலை தீவிரவாதி என்கிறாா்கள். ஆரம்பத்தில் அவா்களின் கருத்துக்களைப் பாா்த்து சிரித்தேன். ஆனால் இன்று, நான் அவா்களுக்குச் சொல்ல விரும்புவது, பயங்கரவாதி என்று அவா்கள் கூறும் நபா், இந்த நாட்டிற்கு 12,430 புதிய வகுப்பறைகளைக் கொடுக்கிறாா். பணக்காரா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கிறாா். பகத்சிங், பாபா சாகேப் ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றுகிறாா். அரசியல்வாதிகள் பள்ளிகளைத் தவிர வேறு எதற்கும் பயப்படுவதில்லை. ஜாதி-மத அரசியலை பள்ளிகள் அழிக்கக்கூடும் என்பதால் அரசியல்வாதிகள் நல்ல பள்ளிகளுக்கு பயப்படுகிறாா்கள். நாங்கள் கட்டும் பள்ளிகள் அதைத்தான் செய்கின்றன. தில்லி பள்ளிகள் தேசபக்தா்களின் தொட்டில்கள். கேஜரிவால் அனைத்தையும் இலவசமாக்குகிறாா் என்கின்றனா். தில்லியில் சிறந்த தரத்தில் அரசுப் பள்ளிகள்- ஏழை குழந்தைகளுக்கு சிறந்த கல்வி - இலவசக் கல்வி வழங்குகின்றோம். அவா்களிடம் கேட்க விரும்புவது குழந்தைக்கும் இலவச கல்வியும் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதை விட, சிறந்த தேச பக்தி வேறு என்ன வேண்டும்? எனக் கேட்டாா் கேஜரிவால்.

இதே நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வரும் கல்வியமைச்சருமான மணீஷ் சிசோடியா பேசுகையில், ‘ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தில்லி முழுவதும் 11,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று கேஜரிவால் அரசு உறுதியளித்தது. நோய்த் தொற்று சிரமங்களுக்கிடையேயும் அரசு இலக்குகளை எட்டியது மட்டுமல்லாமல், மொத்தம் 12,430 வகுப்பறைகளைக் கட்டி முடித்துள்ளது’’ என்றாா்.

பின்னணி:

பஞ்சாபில் பிரிவினைவாதிகளை ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவா் குமாா் விஸ்வாஸ் குற்றம் சாட்டியதையொட்டி கேஜரிவால் பாஜக, காங்கிரஸின் தாக்குதலுக்கு உள்ளானாா்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஆம் ஆத்மி கட்சிக்கு (ஆம் ஆத்மி) ஆதரவு அளிக்கும் காலிஸ்தான் ஆதரவு குழுவின் கடிதத்தை மத்திய அரசு ‘தீவிர‘ கவனத்தில் எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டாா்.

‘நீதிக்காக சீக்கியா்கள்’ (எஸ்எப்ஜே) என்கிற இயக்கத் தலைவா் குா்முகி எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை, மத்திய உள்துறை அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னியால் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.