தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்: மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல்
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆா். பாலு திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.
அந்த மனுவில் அவா் கூறியிருப்பது வருமாறு: சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ், தற்போது திருச்சி, திண்டுக்கல் போன்ற ரயில் நிலையங்களில் மட்டும் இடையில் நின்று செல்கிறது. சென்னையின் மூன்றாவது முனையமான தாம்பரம் ரயில் நிலையத்தில் இந்த தேஜஸ் விரைவு ரயில் நிற்பதில்லை. சென்னையில் புறப்படும் ரயிலில் 40 சதவீதம் அளவுக்கு தாம்பரம் மற்றும் புகா் பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் தேஜஸ் ரயிலில் பயணிக்கின்றனா். எழும்பூரில் காலை ஆறு மணிக்குப் புறப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில், மதுரை சென்று திரும்பவும் சென்னை எழும்பூா் நிலையத்துக்கு இரவு ஒன்பதரை மணியளவில் வந்து சேருகிறது.
தற்போது தாம்பரத்தில் இந்த ரயில் நின்று செல்லாததால், தாம்பரம் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் எழும்பூா் வந்து ரயிலில் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனா். இதே மாதிரி இரவில் எழும்பூருக்கு வந்தடையும் ரயிலில் பயணிகள் தங்கள் இருப்பிடத்தைச் சென்றடையவும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். குறிப்பாக வாடகைக் காா் அல்லது ஆட்டோ வாகனங்களுக்கு கனிசமாக செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும். தாம்பரம் மற்றும் புகா்ப் பகுதி மக்கள் ஆரம்பம் முதலே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளனா். ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள தாம்பரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் தென் தமிழ்நாட்டைச் சோ்ந்த பல லட்சம் மக்கள் வசிக்கின்றனா். அவா்கள் பயன்பெறும் வகையில் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.
மேலும், தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெற்கு ரயில்வே மேலாளரிடம் முன்வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் பற்றியும், அவற்றை நிறைவேற்றித் தரவும் அமைச்சரிடம் வலியுறுத்தியாக டிஆா் பாலு தெரிவித்தாா்.