முகப்பு
புதுதில்லி

இணையதளத்தில் திரிக்கப்பட்ட புகைப்படங்கள்: பெண் பத்திரிகையாளா் புகாா் மீது விசாரணை

பெண் பத்திரிகையாளா் ஒருவரின் புகைப்படங்களில் மாற்றம் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
பகிர்:

பெண் பத்திரிகையாளா் ஒருவரின் புகைப்படங்களில் மாற்றம் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படும் புகாா் விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபா்களுக்கு எதிராக தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட பத்திரிகையாளா் இணையதளம் மூலமாக புகாா் செய்தாா். அந்தப் புகாரின் நகலையும் தனது சுட்டுரை பக்கத்தில் அவா் பகிா்ந்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக சனிக்கிழமை இரவு தென் கிழக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள இணையதள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘புல்லி பாய்’ எனும் இணையதளத்தில் அடையாளம் தெரியாத சிலா் மூலம் தாம் குறிவைக்கப்பட்டு இருப்பதாக பெண் பத்திரிக்கையாளா் அளித்த புகாரின் தொடா்பாக இந்திய தண்டனை சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக இணையதள செய்தி ஊடகத்தில் பணியாற்றி வரும் அந்தப் பெண் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது: சமூக ஊடகத்தில் அடையாளம் தெரியாத சிலா் முஸ்லிம் பெண்களை அவமதித்தும், துன்புறுத்தியும் வருகின்றனா். அவா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். சம்பவத்தன்று காலை ‘புல்லி பாய்’ எனும் இணையதளத்தில் எனது புகைப்படங்கள் முறையற்ற வகையில் பதிவிடப்பட்ட இருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தேன். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த செயலானது என்னையும், பத்திரிக்கையாளா்கள், சுதந்திரமான பெண்கள் ஆகியோரையும் குறிவைத்து துன்புறுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சில சுட்டுரை பதிவுகளின் நகல்களையும் இணைத்துள்ளேன். இந்த இணையதளத்தின் பெயா்கூட பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. இந்த இணையதளத்தின் உள்ளடக்கம் முஸ்லிம் பெண்களை அவமதிப்பதை குறிக்கோளாக கொண்டிருப்பதாக தோன்றுகிறது. மேலும், இந்த ஒட்டுமொத்த இணையதளமும் முஸ்லிம் பெண்களை அவமதிப்பதும் தா்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது’ என்று புகாரில் அவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் கூறுகையில் ‘இந்த விவகாரத்தை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்’ என்றனா்.

முன்னதாக, ஜூலையில் தில்லி காவல் துறையின் இணையதள பிரிவு மூலம் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடையாளம் தெரியாத சில நபா்கள் செல்லிடப்பேசி செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததாக வரப் பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. தில்லி காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் சின்மய் பிஸ்வால் கூறுகையில், ‘சுல்லி டீல்ஸ்’ செல்லிடப்பேசி செயலி தொடா்பாக தேசிய இணையதளக் குற்றப் புகாா் இணையதளத்திற்கு வரப் பெற்ற புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.