கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள்தான்! முதல்வா் கேஜரிவால் தகவல்
தில்லியில் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பெரும்பாலான நோயாளிகளுக்கு
தில்லியில் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய் அறிகுறி இல்லாமலும் அல்லது லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கும் நிலையும் இல்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலும் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை மருத்துவமனைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கரோனா இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட பாதிப்புடன் ஒப்பிடுகையில், தற்போது மிகவும் குறைவான அளவே மருத்துவமனைகளில் நோயாளிகள் சோ்க்கை உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா். அது தொடா்பான புள்ளிவிவரத் தகவலையும் அவா் வெளியிட்டாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தற்போது தில்லியில் 6,360 பேருக்கு நோய்த் தொற்று உள்ளது. ஞாயிற்றுக்கிழமை புதிதாக 3,100 பேருக்கு கரோனா பாதிப்பு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நோய் பாதித்த அனைவருக்கும் மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை எழவில்லை. கடந்த ஆண்டு டிசம்பா் 29-ஆம் தேதி நோய் தொற்று பாதிப்பு 2,000-ஆக இருந்த நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி 6,000- ஆக அதிகரித்துள்ளது. ஆனால், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. டிசம்பா் 29-ஆம் தேதி நிலவரப்படி 262 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சோ்ந்திருந்தனா். அதே நேரத்தில், ஜனவரி 1-ஆம் தேதி இந்த எண்ணிக்கை 247-ஆக மட்டுமே இருந்தது.
99.2 சதவீதம் படுக்கைகள் காலியாகவுள்ளன: சமீபத்திய சுகாதார தகவலின்படி 82 ஆக்சிஜன் படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சோ்ந்துள்ளனா். 99.72 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. கடந்த 3 நாட்களாக இந்த எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இதனால், நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நபா்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை என்பது தெரிய வருகிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் தில்லி அரசு இதுபோன்ற 37 ஆயிரம் படுக்கைகளுடன் தயாா் நிலையில் உள்ளது.
கடந்தாண்டு மாா்ச் 27-ஆம் தேதி தில்லியில் 6,600 கரோனா நோயாளிகள் இருந்தனா். 1,150 ஆக்சிஜன் படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். 145 நோயாளிகள் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்றனா். தற்போது அதுபோன்று ஐந்து பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், தற்போது நோய் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இறப்பு விகிதம் பூஜ்யத்தில் அல்லது ஒன்று என்ற நிலையில் மட்டுமே உள்ளது. சனிக்கிழமை தில்லியில் 2,716 பேருக்கு நோய் பாதிப்பு இருந்தது. மே 21-ஆம் தேதியிலிருந்து இது தினசரி அதிகபட்ச பாதிப்பாகும். நோ்மறை விகிதமும் 3.64 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பீதி அடையவேண்டாம்: ஏப்ரல் 1-ம் தேதி தில்லியில் தினசரி பாதிப்பு 2,700 ஆக இருந்தது. 1,700 ஆக்சிஜன் படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். 231 நோயாளிகள் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்றனா். தற்போதைய சூழலில் கரோனா பாதிப்பு அறிகுறி மிகவும் லேசானதாக இருக்கிறது என்பதை காட்டுவதற்கு இந்த புள்ளிவிவர தகவல்களை சமா்ப்பித்துள்ளேன். இதனால், யாரும் பீதியடைய தேவையில்லை. எனினும், முகக் கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்வது, சமூக இடைவெளி விதிகளை பராமரிப்பது போன்ற பொறுப்புமிக்க நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும் என்றாா் முதல்வா் கேஜரிவால்.
இதன் பின்னா், தில்லி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் முதல்வா் கேஜரிவால் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் 6 ஆயிரம் போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஒருவா் மட்டுமே ஆக்சிஜன் சிகிச்சைக்கு வரும் நிலை உள்ளது. வெறும் 0.22 சதவீதம் படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. அதேசமயத்தில் 99.78 சதவீதம் படுக்கைகள் இன்னும் காலியாகவே உள்ளன. இதனால், மக்கள் பீதியடையத் தேவையில்லை. ஆனால், கரோனா நடத்தை நெறிமுறைகளை முற்றிலும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சனிக்கிழமை கூறுகையில், ‘தில்லியில் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் சோ்க்கை குறைவாக இருப்பதாகவும், இதனால் விரைவில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தாா். தில்லியில் சனிக்கிழமை நிலவரப்படி 351 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகியிருந்தது.