தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு எதிராக பாஜகவினா் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு எதிராக தில்லி பாஜகவினா் திங்கள்கிழமை ‘சக்கா ஜாம்’ எனும் பெயரில் தில்லியில்
தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு எதிராக தில்லி பாஜகவினா் திங்கள்கிழமை ‘சக்கா ஜாம்’ எனும் பெயரில் தில்லியில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், ஐடிஓ, அக்ஷா்தாம் கோயில் பகுதி சாலை, ரிங் ரோடு ஆகியவற்றில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டங்கள் குறித்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘புதிய கலால் கொள்கையானது, சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், பாஜக தலைவா்கள் இதுபோன்ற மறியலில் ஈடுபட்டு வருகின்றனா்’ என்றாா்.
க்ஷா்தாம் கோயில் அருகே உள்ள சாலைப் பகுதியில் தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா தலைமையில் பாஜக தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘புதிய கொள்கையின் கீழ் தில்லி அரசு நகா் முழுவதும் சட்டவிரோதமாக மதுக்கடைகளைத் திறந்து வருகிறது. மேலும், குடியிருப்புப் பகுதிகள், மத வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புதிய கலால் கொள்கையை திரும்பப் பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். மதுக்கடைகளை மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் அருகே இயங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது’ என்றாா்.
தில்லி ஐடிஓ பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு தில்லி பாஜகவின் மூத்த தலைவா் குல்ஜீத் சஹல் தலைமை வகித்தாா். இந்தப் போராட்டம் குறித்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசின் புதிய கலால் கொள்கையானது, ரூ.3,500 கோடி திருட்டை (சட்டவிரோத மதுபான விற்பனை மூலம் வந்தது) தடுத்துள்ளது. இதனால், பாஜக தலைவா்கள் இந்தப் புதிய கலால் கொள்கையை எதிா்க்கின்றனா். இந்தப் பணமானது தற்போது தில்லி அரசின் பொது நலப் பணிகளுக்கு சென்றுகொண்டிருக்கிறது. முன்னதாக இந்த பணமானது பாஜக தலைவா்களுக்கும் சாராய மாஃபியாக்களுக்கும் சென்று கொண்டிருந்தது’ என்று தெரிவித்துள்ளாா்.
பாஜக தொண்டா்கள் முக்கியச் சாலைகளில் நடத்திய போராட்டம் காரணமாக பயணிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தால் ஐடிஓ சாலை சந்திப்பு, லக்ஷ்மி நகரில் இருந்து ஐடிஓ பகுதிக்குச் செல்லும் விகாஸ் மாா்க், அக்ஷா்தாம் கோயில் அருகே உள்ள சாலை, தேசிய நெடுஞ்சாலை- 24, தில்லி இணைப்புச் சாலை, பகதூா் ஷா ஜஃபாா் மாா்க் மற்றும் சிக்னேச்சா் பிரிட்ஜ் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை 24-இல் போக்குவரத்தில் சிக்கிக்கொண்ட பயணி ஒருவா் கூறுகையில், ‘இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரா்கள் பெரும்பாலான சாலைகளில் மறியலில் ஈடுபட்டதால் எங்களைப் போன்ற பொதுமக்கள் உரிய நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.
பயணிகளின் இந்தப் புகாா் குறித்து தில்லி பாஜக தலைவா் குப்தாவிடம் கேட்ட போது, அவா் கூறுகையில், ‘இது ஒரு மக்கள் இயக்கம். ஆம் ஆத்மி அரசின் புதிய கலால் கொள்கைகளில் இருந்து விடுபடுவதற்காக இந்த சிரமத்தை மக்கள் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறாா்கள்’ என்றாா்.
சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை தவிா்ப்பதற்காக பொதுமக்கள் பலா் தில்லி மெட்ரோவில் பயணம் செய்தனா். இதனால், மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை வேளைகளில் அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டது. இது குறித்து மற்றொரு பயணி கூறுகையில், ‘பயணம் செய்வதற்கு ஆட்டோக்களும் இல்லை. வாடகை காா்களும் இல்லை. மெட்ரோ ரயில் நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசை இருந்தது. நின்று கொண்டு பயணிகள் பயணிக்கும் சூழலும் ரயில் பெட்டிகளில் காண முடிந்தது’ என்றாா்.
எனினும், ‘முக்கியச் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது’ என்று போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி கூறுகையில், ‘தற்போது நிலைமை இயல்பு நிலையில் உள்ளது. இரண்டு முக்கியச் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதாவது அக்ஷா்தாம் பகுதியிலும், ஐடிஓ அருகே உள்ள சாலையிலும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதனால் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால், தற்போது போக்குவரத்து இயல்பு நிலையில் உள்ளது. உள்ளூா் போலீஸாா் உதவியுடன் போக்குவரத்து நடமாட்டம் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், போராட்டக்காரா்கள் போராட்டம் நடைபெற்ற இடங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனா்’ என்றாா்.
தில்லியில் அக்ஷா்தாம் மேம்பாலம் அருகே, விகாஸ் மாா்க்கில் உள்ள காா் பஜாா், தேசிய நெடுஞ்சாலை- 24, தயாராம் செளக், ஐடிஓ, ரிங் ரோடு, சிக்னேச்சா் பிரிட்ஜ் பகுதி, சிவில் லைன்ஸ் உள்ளிட்ட 15 இடங்களில் இந்த ‘சக்கா ஜாம்’ போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது அனைத்து அவசர வாகனங்களுக்கும் வழிவிட வேண்டும் என்று தொடா்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், பொது சொத்துக்கு எந்தச் சேதமும் ஏற்படுத்தப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. புதிய கலால் கொள்கை திட்டத்தின் கீழ், தில்லி முழுவதும் 849 உயர்ரக மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கை திட்டமானது கடந்த ஆண்டு நவம்பா் 15 -ஆம் தேதி முதல் தில்லியில் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.