முகப்பு
புதுதில்லி

மேக்கேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜன.25-க்கு ஒத்திவைப்பு

மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டுமானம் விவகாரம் தொடா்புடைய கா்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்துவைத்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
பகிர்:

மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டுமானம் விவகாரம் தொடா்புடைய கா்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்துவைத்து தேசிய பசுமை தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாகக் கூறி செய்தித் தாளில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டல அமா்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக எதிா் தரப்பினருக்கும் நோட்டீஸ் அளிக்கவும், இந்த விவகாரம் தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கவும் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து கா்நாடக அரசின் தரப்பில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை கடந்த ஜூன் 17-ஆம் தேதி விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த ‘சூ மோட்டோ’ வழக்கு விவகாரத்தை தீா்ப்பாயம் தொடா்வதற்குத் தேவையில்லை. ஆகவே, தீா்ப்பாயத்தின் முன் உள்ள வழக்கு மற்றும் மேல்முறையீட்டு மனு முடித்து வைக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, வேறு ஒரு வழக்கில் தீா்ப்பு அளிக்கப்பட்ட பிறகு விசாரணைக்குப் பட்டியலிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஏ.எம்.கான்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா்கள் ஜி.உமாபதி, டி.குமணன் உள்ளிட்டோருடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில்,‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் எந்த வாய்ப்பும் வழங்க தேசிய பசுமைத் தீா்ப்பாய முதன்மை அமா்வு தவறிவிட்டது. மேலும், இந்த மனுவை தென் மண்டல அமா்வு மீண்டும் விசாரிக்கவே பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருக்க வேண்டும். மேலும், இது ஒரு கட்டுமானத் திட்டமாகும்’ என்றாா்.

அப்போது, கா்நாடக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் தவண், ‘தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு பராமரிக்கத்தக்கதல்ல’ என்றாா். இதையடுத்து, மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக 2018-இல் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுடன் சோ்த்து விசாரிக்கும் வகையில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 25-க்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.