முகப்பு
புதுதில்லி

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிராக பொய்ச் செய்திகைளை பரப்பும் ‘யு-டியூப்’ சேனல்கள்: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை நடவடிக்கை

மின்னணு சமூக ஊடகங்கள் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு பொய்ச் செய்திகளைப் பரப்பும் 35 யு-டியூப் சேனல்கள், 2 இணையதளங்கள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

மின்னணு சமூக ஊடகங்கள் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு பொய்ச் செய்திகளைப் பரப்பும் 35 யு-டியூப் சேனல்கள், 2 இணையதளங்கள் ஆகியவற்றைத் தடை செய்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலா் அபூா்வ சந்தரா, இணைச் செயலா் விக்ரம் சகாய் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 35 யு-டியூப் சேனல்கள், இந்தியாவிற்கு எதிரான அவதூறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்தச் சேனல்களுக்கு 1.20 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரா்களும், 130 கோடிக்கும் மேற்பட்ட பாா்வையாளா்களும் உள்ளனா். இந்தச் சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் இந்தியாவுக்கு எதிரான அவதூறு தகவல்களை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளன. கூடுதலாக 2 ட்விட்டா் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றொரு முகநூல் கணக்கு போன்றவற்றின் மூலம் இது போன்ற செயல்கள் நடைபெறுவதும் கண்டிப்பிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இவற்றைத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மின்னணு ஊடக விதிமுறைகள்) சட்டம் -2021, விதி 16-இன் கீழ் இந்த சமூக வலைத்தளங்களை தடை செய்து 5 உத்தரவுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனித்தனியாகப் பிறப்பித்துள்ளது. இந்த சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை இந்திய புலனாய்வு அமைப்புகள், உன்னிப்பாகக் கண்காணித்து வந்தன. இந்த யு-டியூபா் சேனல்கள் இந்தியாவுக்கு எதிராக விஷமத்தைப் பரப்பி ஒரு போரை நடத்திக் கொண்டிருந்தன. மேலும், இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவித்தும் வந்தன.

இது குறித்த அறிக்கை அளித்ததுடன், உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் புலனாய்வு அமைப்புகள் பரிந்துரைத்தன. இதைத் தொடா்ந்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்த சமூக ஊடகங்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இவற்றில் சில யு-டியூப் சேனல்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளா்கள் மற்றும் தொகுப்பாளா்களால் நடத்தப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது என்றாா் அபூா்வா சந்தரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.