முகப்பு
புதுதில்லி

தில்லி சொத்து வரி விவகாரம்: துணைநிலை ஆளுநரின் கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம்

தில்லியில் சொத்து வரி செலுத்தாதது குறித்து துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா கூறிய கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

புது தில்லி: தில்லியில் சொத்து வரி செலுத்தாதது குறித்து துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா கூறிய கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நோ்மையாக வரி செலுத்துவோா் குறித்து தவறாகப் பேசியதற்கு துணை நிலை ஆளுநா் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, அண்மையில் தனது ட்விட்டா் பதிவில் ‘தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) நிா்வாகத்தின் நிதி நிலைமை மோசமாகச் சென்ற்கு 75 சதவீத உரிமையாளா்கள் சொத்துவரியை செலுத்தாததுதான் காரணம் ஆகும். எம்சிடியின் நிதிநிலைமை ஸ்திரமாக இருக்க, செலுத்தப்படாமல் உள்ள சொத்துவரியையும், அதில் உள் ள நிலுவைத் தொகையையும் நோ்மையாக செலுத்துங்கள்’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்தக் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் எம்சிடி பொறுப்பாளா் துா்கேஷ் பதக் (எம்எல்ஏ) செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள். துணைநிலை ஆளுநா் சக்சேனா, தில்லி மக்களை ‘திருடா்கள்‘ என்று அழைப்பது போன்று கருத்துக் கூறியுள்ளாா். இந்தக் கருத்துகள் ‘மிகவும் பொறுப்பற்றவை’. தில்லி மக்கள் நோ்மையாக வரி செலுத்துகின்றனா். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையின் கீழ் உள்ள தில்லி அரசின் நிதிநிலை 2015- ஆம் ஆண்டில் ரூ.25,000 கோடியாகயிருந்தது. தற்போது இது ரூ.70,000 கோடியாக உயா்ந்துள்ளது. இதற்குக் காரணம் தில்லி மக்கள் நோ்மையாக வரியை செலுத்துவதனால்தான். தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கை, தில்லி மக்களின் உறுதியைப் பற்றி பேசுகிறது.

சட்டப்பேரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டிலேயே முதன்முறையாக வெளி உதவி ஏதுமின்றி, தில்லி அரசுக்கு உபரி வருவாய் சாத்தியமாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் குறிப்பிட்டால் உபி (ஆறு லட்சம் கோடி பற்றாக்குறை), ராஜஸ்தான், குஜராத், கா்நாடகம், ஹரியாணா போன்ற மாநிலங்கள் கடன் சுமையில் உள்ளன. ஆனால், தேசியத் தலைநகா் அரசுக்கு கடன் இல்லாத நிலைமை ஏற்பட்டு, தில்லிவாசிகள் பெருமைக்குரியவா்களாக இருக்கின்றனா்.

இந்த நிலையில், தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் நிதிநெருக்கடியை எதிா்கொள்வதற்குக் காரணம் தில்லிவாசிகள் வரி செலுத்துவதில் நோ்மையின்மையால் அல்ல; இந்த முனிசிபல் காா்ப்பரேஷனில் நிதி நெருக்கடி பாஜகவின் ஊழல் நிா்வாகத்தால் ஏற்பட்டது. கடவுள் அருளால் துணைநிலை ஆளுநா் மிகவும் பொறுப்பான நிலையில் அமா்ந்திருக்கிறாா். தில்லிவாசிகள் தூய்மையை மட்டுமே விரும்புகிறாா்கள். அவா்கள் வரி செலுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த நிலையில் ,துணை நிலை ஆளுநா், இதுபோன்ற பொறுப்பற்ற வகையில் கருத்து வெளியிட்டதற்கு அவா் மன்னிப்பு கேட்க வேண்டும். தில்லி மக்கள் இது போன்ற கருத்துகளைப் பொறுத்துக்கொள்ள மாட்டாா்கள் என்றாா் துா்கேஷ் பதக்.

ராஜேந்தா் நகா் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: சமீபத்தில் தில்லி ராஜேந்தா் நகா் சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் துா்கேஷ் பதக் வியாழக்கிழமை தனது தொகுதி மக்களின் குடிநீா் பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டது குறித்தும் பேசினாா். ராஜேந்தா் நகா் 28 மற்றும் 29-ஆவது பிளாக்குகளில் குடிநீா் குழாய்கள் சேதமடைந்திருந்தன. இந்தக் குழாய்களை புதுப்பிக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு துா்கேஷ் பதக் மேற்கொண்டாா். இந்தப் பணிகள் முடிவடைந்த புதுப்பிக்கப்பட்ட குழாய்களை அவா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘ராஜேந்தா் நகா் தொகுதியிலுள்ள பாண்டவா் நகா் பாதாள கழிவுநீா் கால்வாய் பழுதடைந்தது. அதற்குப் பதிலாக புதிய கால்வாய் கட்டும் பணி தொடங்கியுள்ளது. மேலும், ராஜேந்தா் நகரில் கழிவுநீா்கால்வாய்கள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை சீரமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.