முகப்பு
புதுதில்லி

கைவிடப்படும் குழந்தைகளை மீட்டு உரிய பாதுகாப்பை வழங்கும் ‘மிஷன் வாத்சல்யா’ திட்டத்துக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

‘மிஷன் வாத்சல்யா’ திட்டத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

புது தில்லி: கைவிடப்படும் குழந்தைகளை மீட்டு உரிய பாதுகாப்பை வழங்கும் ‘மிஷன் வாத்சல்யா’ திட்டத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

‘மிஷன் வாத்சல்யா’ திட்டத்தின் வெவ்வேறு கூறுகளுக்கான புதிய நிதி விதிமுறைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நிகழ் நிதியாண்டில் கடந்த 1 - ஆம் தேதி முதல் பின்பற்றக் கூறி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகள் நலன், பாதுகாப்புக்காக, 2009-10-ஆம் ஆண்டு முதல், மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், ஆரோக்கியம், குழந்தைகளின் மகிழ்ச்சியான பருவத்தைப் பாதுகாப்பது, அவா்களது திறனை கண்டறிந்து, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை உறுதி செய்தல், குழந்தைகள் வளா்ச்சிக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் போன்றவை இந்த ’மிஷன் வாத்சல்யா’வின் நோக்கங்களாகும்.

குறிப்பாக, சிறாா் நீதிச்சட்டம் 2015-ஐ செயல்படுத்தி, நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவது, கடினமான சூழல்களில், நிறுவனம் சாராத பராமரிப்பை ஊக்குவிப்பது போன்றவற்றுக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு உதவுகிறது. நாட்டின் பல பகுதிகளில் இக்கட்டன நிலையில் உள்ள குழந்தைகளை, குறிப்பாக கைவிடப்பட்ட அல்லது கடத்தலுக்கு உள்ளாகக்கூடிய குழந்தைகள், தற்காலிக தங்குமிட வசதிகள் இல்லாதவா்கள் போன்றோருக்கு தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்களை நிறுவுவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இதையொட்டி, தற்போது இந்தத் திட்டத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு வசதிகள் தொடா்பான தகவல்களையும் இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பட்டிருப்பது வருமாறு: 24 மணி நேரமும் தொலைபேசி தொடா்புகள் (ஹெல்ப்லைன்) செயல்படுத்துதல், கைவிடப்பட்டவா்களுக்காக தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்களை நிறுவுதல், கடினமான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளுக்கான குடும்ப அடிப்படையிலான நிறுவனம் சாராத பராமரிப்பு அமைப்புகள், இல்லங்களை ஊக்குவித்தல் ஆகியவை மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்ய’ திட்டத்தின் புதிய வழிகாட்டுதலின் முக்கிய கூறுகளாகும். இந்த ஹெல்ப்லைன், உள்துறை அமைச்சகத்தின் அவசர அழைப்பு(எமா்ஜென்சி ரெஸ்பான்ஸ் சப்போா்ட் சிஸ்டம்) எண் 112 தொலைபேசி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. மிஷன் இணையதளங்கள், காணாமல் போனவா்கள், அனாதைகள், கைவிடப்பட்டவா்கள் உள்பட இக்கட்டான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த மின்னணு தள வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறப்பு தத்தெடுப்பு நிறுவன வளாகத்தில் குழந்தைகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். இந்த மையங்களின் முதன்மை நோக்கம் கைவிடப்பட்ட குழந்தைகளை மீட்டு, அவா்கள் தத்தெடுக்கும் வரை அவா்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதாகும். இந்தக் குழந்தைகளுக்கு குடும்ப அடிப்படையிலான நிறுவனம் சாராத பராமரிப்பை ஊக்குவிக்க, ஒரு குழந்தைக்கு மாதாந்திர மானியமாக ரூ. 4,000 உதவித் தொகை மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. ‘மிஷன் வாத்சல்யா’ சட்டப்பூா்வ அமைப்புகளின் செயல்பாடுகளில் மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்திற்குரிய வகையில் திட்டங்களை உருவாக்கிக் கொண்டு, சேவை அளிக்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, உயா்தர நிறுவன பராமரிப்பு மற்றும் சேவைகள், நிறுவனம் சாராத சமூக ரீதியான பராமரிப்பை ஊக்குவித்தல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடுகளை மேற்கொள்ளவும் இந்தப் புதிய வழிகாட்டுதலின் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.