முகப்பு
புதுதில்லி

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி தடை இன்று முதல் அமல்: கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை

தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழுவால் (டிபிசிசி) அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய 19 வகை நெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களுக்கான தடை திங்கள்கிழமை (ஜூலை 11) முதல் அமலுக்கு வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழுவால் (டிபிசிசி) அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய 19 வகை நெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களுக்கான தடை திங்கள்கிழமை (ஜூலை 11) முதல் அமலுக்கு வருகிறது.

இதைக் கண்காணிக்க தில்லி சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்த தடையை மீறும் கடைகள், அலகுகள் மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி சுற்றுப்புறச் சூழல் அமைச்சக அதிகாரிகள் கூறியது வருமாறு: ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய நெகிழி(எஸ்யுபி) தடையை மீறுவது தொடா்பான அனைத்து புகாா்களையும் பெறுவதற்கு தில்லி அரசில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்க குழுக்களுக்கு உத்தரவிடப்படும்.

எஸ்யுபி பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை டிபிசிசி குழுவினா் கண்காணித்து நடவடிக்கைகளை எடுப்பாா்கள். சந்தைகள் மற்றும் பிற பொது இடங்களில் தடையை மீறுவது தொடா்பான புகாா்களை பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பலாம். சம்பந்தப்பட்ட புகாா்கள் மீது முனிசிபல் அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிமீறல்கள் தொடா்பான குறைகளை தில்லி அரசின் ‘பசுமை தில்லி’ செயலி அல்லது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘நமட-இடஇஆ’ செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம். ‘தடையை மீறும் அலகுகள் மீது ஜூலை 11 முதல் சட்டப்படி தொடா்புடைய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடவும் உத்தரவிடப்படும். இனி எந்த எச்சரிக்கை காலக்கெடுவும் கொடுக்கப்படமாட்டாது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய நெகிழி பொருள்களின் மீதான தடை நடைமுறைக்கு வந்த போது, தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய், தடைக்கான விழிப்புணா்வு ஏற்பட பத்து நாள்கள் அவகாசம் கொடுக்கப்படும் என அறிவித்தாா். தடை செய்யப்பட்ட பொருள்களின் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்துவதிலும் ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துவதற்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த அவகாசம் ஜூலை 10-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இப்போது தடையை மீறும் பிரிவுகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவாா்கள். அதன்பிறகு மீண்டும் தவறு செய்பவா்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-இன் கீழ் ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும். தடையை அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக வருவாய்த் துறை மற்றும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு முறையே 33 மற்றும் 15 குழுக்களை அமைத்துள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.