முகப்பு
புதுதில்லி

தில்லியில் கட்டுமான இடிப்பு தூசி மாசுவைக் குறைக்க இருவார சிறப்பு இயக்கம்

கட்டுமானம் இடிப்பு விவரங்களை இணைய தளத்தில் பதிவிடும் இரு வார சிறப்பு இயக்கத்தை கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு தொடங்கியுள்ளதாக சுற்றுச்சுழல் துறை அமைச்சா் கோபால் ராய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

தில்லியில் தூசி மாசுப்பாட்டைக் குறைக்கும் விதமாக கட்டுமானம் இடிப்பு விவரங்களை இணைய தளத்தில் பதிவிடும் இரு வார சிறப்பு இயக்கத்தை கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு தொடங்கியுள்ளதாக சுற்றுச்சுழல் துறை அமைச்சா் கோபால் ராய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லியில் தூசி மாசுபாட்டைக் குறைக்க, கடந்த 2021 ஆம் ஆண்டில் கட்டுமானம் மற்றும் இடிப்பு (சி அண்ட் டி) தகவல்களை பதிவிட இணைய தளம் உருவாக்கப்பட்டது. தற்போது தூசி மாசு தீவிரமடைந்துள்ள நிலையில், வருகின்ற ஜூலை 15 முதல் 30- ஆம் தேதி வரை சிறப்பு இயக்கம் நடத்த தில்லி சுற்றுச் சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் கூறியது வருமாறு: கேஜரிவால் தலைமையிலான அரசு மாசுபாடு விவகாரத்தில் மிகவும் கவனமாக உள்ளது. குறிப்பாக கட்டுமான தளங்கள் புதுபித்தல் அல்லது இடிக்கப்படும் போது எழும் தூசி மாசுபாடு மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, இந்த மாசுவைக் கண்காணிக்க கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் கட்டுமான மற்றும் இடிப்பு இணையதளம் தொடங்கப்பட்டது. 500 சதுர மீட்டருக்கு மேல் இடிக்கப்படும் கட்டடத்தளங்கள் குறித்து சம்பந்தப்பட்டவா்கள் தில்லி அரசின் இணைய தளத்தில் கட்டாயமாக சுய-பதிவு செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதற்குக் காரணம், அனைத்து கட்டுமானம் மற்றும் இடிப்பு பகுதிகளை பாா்வையிடுவதும், தூசிமாசு கட்டுப்பாடு விதி மீறல்களை கண்காணிப்பதும் கடினம் என்பதால் இந்த சுய மதிப்பீட்டு இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணைய தளங்களின் தரவுகள் மூலம் அனைத்து மாவட்ட மாசு கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகளும் தள ஆய்வுகளை மேற்கொண்டு, அறிக்கைகளை சமா்ப்பித்தல் மற்றும் விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறது.

கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுபவா்கள் இணையதளங்களில் பதிவு செய்து, தூசி கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்குவதை சுயமாக அவா்களே தணிக்கை செய்து, 15 தினகளுக்கு ஒருமுறை சுய அறிவிப்பு படிவத்தை பதிவேற்றம் செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

இதனுடன், தொலைதூர இணைப்புடன் கூடிய காணொலி காட்சி வசதியும் கட்டுமான தளத்தில் செய்யப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்ய கட்டட இடிப்பு தளங்கள் குறித்து பதிவு செய்யாத உரிமையாளா்கள், நிறுவனங்கள் மீது தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக வருகின்ற ஜூலை 15 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை கட்டட இடிப்பு பதிவு செய்வதற்கான சிறப்பு பிரசார இயக்கம் தொடங்கப்படும். இதுவரை 600 திட்ட தளங்கள் குறித்து இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து திட்ட தளங்களும் இணைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட மாசு கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகளுக்கும் (டிபிசிசி) உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய, புதுப்பிக்கப்படும் கட்டடத் திட்டங்களில் (பிளான்) சம்பந்தப்பட்ட முகமையின் அனுமதி பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்து அதுவும் இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்துப்பணிகளின் சுய-தணிக்கையின் இலக்கு, மாதாந்திர அறிக்கைகள் சமா்ப்பிக்கவும் டிபிசிசி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தூசிமாசு கட்டுப்பாடுகள் விதிமுறைகளுக்குள் இணங்கி இருக்க அனைத்து சுய-தணிக்கைகளையும் கண்காணித்து உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் கோபால்ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.