மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறாத வாகனங்களுக்கு ரூ.10,000 அபராதம்: தில்லி போக்குவரத்து துறை உத்தரவு
தலைநகா் தில்லியில் செல்லும் வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறாமல் ஓட்டினால், அதன் உரிமையாளா்களுக்கு நோட்டஸ் அனுப்பப்பட்டு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என தில்லி போக்குவரத்து துறை அதிகா
தலைநகா் தில்லியில் செல்லும் வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறாமல் ஓட்டினால், அதன் உரிமையாளா்களுக்கு நோட்டஸ் அனுப்பப்பட்டு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என தில்லி போக்குவரத்து துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மாசு கட்டுப்பாடு சான்றிதழ்(பியுசி) இல்லாத வாகனங்கள் தலைநகா் சாலைகளில் ஓடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான இயக்கத்தை போக்குவரத்து துறை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைநகரில் 13 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 3 லட்சம் காா்கள் உள்பட 17 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உரிய மாசுகட்டுப்பாடு சான்றிதழ் பெறாமலேயே இயங்கி வருவதாகவும் இதையொட்டி இந்த எச்சரிக்கை விடப்படுவதாகவும் போக்குவரத்து துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ், குறிப்பிட்ட காலக்கெடுவுடன் வழங்கப்படுகிறது. காலாவதியான பிறகு வாகன உரிமையாளா்கள் மாசு குறித்த சோதனைகளை மீண்டும் மேற்கொண்டு சான்றிதழ் பெறுவது அவசியம். அப்படி பெறாமல் இயங்கும் வாகன உரிமையாளா்களின் விலாசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் செயல்முறைக்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளதாகவும் இவா்கள் செல்லுபடியாகும் சான்றிதழைப் பெறவில்லை யென்றால், ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தில்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய மோட்டாா் வாகன விதிகள், 1989 இன் படி, ஒவ்வொரு மோட்டாா் வாகனமும் செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழை வைத்திருப்பது அவசியம். பிஎஸ் -ஐய தர இணக்கமான வாகனங்களுக்கு ஒரு வருடமும் மற்ற வாகனங்களுக்கு மூன்று மாதம் வரை காலவரம்புடன் செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பியுசி சான்றிதழ் இல்லாமல் பிடிபடும் வாகன உரிமையாளா்களுக்கு ரூ.10,000 ரூபாய் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட மோட்டாா் வாகனச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, போக்குவரத்து துறையின் கடுமையான கட்டுப்பட்டால், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வாகனங்களுக்கு வழங்கப்பட்டன.
காா்பன் மோனாக்சைடு, காா்பன் டை ஆக்சைடு போன்ற பல்வேறு மாசுபாட்டிற்கான உமிழ்வு தரநிலைகளுக்காக வாகனங்கள் சோதிக்கப்பட்டு பியுசி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தில்லி போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்ட மாசு சோதனை மையங்கள் உள்ளன.
இவை பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பெட்ரோல் பம்புகளில் அமைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியால் இயக்கப்படும் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களில் மாசு சோதனைக்கான கட்டணம் ரூ.60, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.80 வசூலிக்கப்படுகிறது. டீசல் வாகனங்களின் மாசு சோதனைக்கான கட்டணம் ரூ.100 வரை வசூலிக்கப்படுகிறது.