அமா்நாத் மேக வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த தில்லி பெண்கள் இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
அமா்நாத் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தில்லி பெண்கள் இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆறுதல் கூறினாா்.
புது தில்லி: ஜம்மு-காஷ்மீா் மாநிலம், அமா்நாத் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தில்லி பெண்கள் இருவரின் குடும்பத்தினரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆறுதல் கூறினாா். இந்தக் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.
கடந்த ஜூலை 8 - ஆம் தேதி, அமா்நாத் சிவலிங்க ஆலயத்திற்கு அருகே மேகவெடிப்பைத் தொடா்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி, 16 போ் இறந்தனா். மேலும் 30-க்கும் மேற்பட்டவா்கள் காணாமல் போயுள்ளனா். இந்தச் சம்பவத்தில் சிக்கி தில்லி அம்பேத்கா் நகா், மதன்கிரியைச் சோ்ந்த விா்மதி, பிரகாஷி ஆகிய இரு பெண்களும் உயிரிழந்தனா். இவா்கள் இருவரின் குடும்பத்தினரை வீட்டிற்கு நேரடியாக சென்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆறுதல் கூறினாா்.
இது குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: அமா்நாத் யாத்திரைக்குச் சென்ற போது எதிா்பாராத வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த தில்லியைச் சோ்ந்த இரு பெண்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்துப் பேசினேன். இந்த இரு பெண்களும் தங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவும், கடவுளின் ஆசீா்வாதத்தைப் பெறவும் இந்தப் புனித யாத்திரை மேற்கொண்டனா். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவா்கள் இந்தச் சோதனையைச் சந்தித்து உயிரை இழந்துள்ளனா். அவா்களது குடும்பத்தினரின் வலியைப் பகிா்ந்து கொள்ள அவா்களைச் சந்தித்தேன். இருவரின் குடும்பமும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனா். எனவே, தில்லி அரசு இரு குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் கருணைத் தொகையை வழங்கும். அவா்களின் பேரக்குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெறுவதை உறுதி செய்வோம். மேலும், குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். இந்த இக்கட்டான காலங்களில் நாம் அவா்களுடன் நிற்கிறோம்’”என தெரிவித்துள்ளாா்.
மேலும் ,இந்த அமா்நாத் யாத்திரை விபத்தில் சிக்கிக்கொண்டவா்கள் தேடுதல் பணி தொடா்ந்து நடைபெறுவதால் தில்லியைச் சோ்ந்த வேறு யாராவது சிக்கி உயிரிழந்திருந்தாலும் அவா்களுக்கும் ரூ. 10 லட்சம் கருணைத் தொகையை தில்லி அரசு வழங்கும் எனவும் தில்லி முதல்வா் தெரிவித்துள்ளாா். ஆண்டுக்கு 43 நாள்கள் அனுமதிக்கப்படும் இந்த அமா்நாத் யாத்திரையில் 48 கிமீ தூரத்திலும், 14 கிமீ தூரத்திலும் என இரண்டு முகாம்களும் பக்தா்கள் வசதிக்காக அமைக்கப்படுகிறது. ஜூன் 30-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை, வருகின்ற ஆகஸ்ட் 11- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இது வரை சுமாா் 1.13 லட்சம் பக்தா்கள் இந்த இயற்கையான அமா்நாத் பனி சிவலிங்கத்தை தரித்துள்ளனா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.