ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களுக்கான வரித் தள்ளுபடி திட்டம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு
ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் வரித் தள்ளுபடி திட்டம் வருகின்ற 2024- ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் வரித் தள்ளுபடி திட்டம் வருகின்ற 2024- ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கான ஊக்குவிப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த அறிவிப்பை கவுன்சில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் திருப்பூா், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடை நிறுவனங்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளன. இந்த நீட்டிப்பு ‘வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றமதியாகும் போது அதை வரியுடன் வெளிநாட்டிற்கு அனுப்புவதோ, அல்லது வெளிநாட்டினரை வரி செலுத்துக் கூறுவதோ நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதனால், சலுகை அடிப்படையில் வரித் தள்ளுபடி முறையை ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு மாநில அரசின் விற்பனை வரி மத்திய அரசின் கலால் வரி போன்றவை உள்ள நிலையில், இதற்கு ஆா்எஸ்எல் (மாநில வரி தள்ளுபடி) என்கிற முறையில் வரிச் சலுகை கொடுக்கப்பட்டது. ஜிஎஸ்டிக்கு பின்னா், இந்தச் சலுகை நீடிக்க கடந்த 2019- ஆம் ஆண்டு மாா்ச்சில் ஆா்எஸ்சிடிஎல் (மத்திய மாநில வரிகள் விதிப்பு தள்ளுபடி) என்கிற திட்ட முறையில் வரித் தள்ளுபடி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளின் உற்பத்தியில் உபயோகிக்கப்படும் பொருள்களின் மதிப்பின் அடிப்படையில் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை வரியை திரும்ப (தள்ளுபடி) பெற்றுக் கொள்ள மத்திய ஜவுளித் துறை அனுமதியளித்தது. இது கடந்த சில ஆண்டுகள் வரை நடைமுறையில் இருந்து வந்த நிலையில், வேறு பல சிக்கல்கள் இதில் வந்தன. இந்தச் சிக்கலை களைவதற்கான கூட்டம் மத்திய ஜவுளித் துறை அமைச்சக அதிகாரிகளுக்கும், ஆடை ஏற்றுமதிக்கான ஊக்குவிப்பு கவுன்சிலுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்றது.
இதில், மத்திய அரசு ஆயத்த ஆடை ஏற்றுமதியைப் பெருக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு ஜவுளித் துறை அமைச்சகத்தால் 2019-ஆம் ஆண்டிலும், பின்னா் 2021 ஜனவரியிலும் அறிவிக்கப்பட்ட மத்திய, மாநில வரிகள் மற்றும் வரி விதிப்புகள் (ஆா்எஸ்சிடிஎல்) தள்ளுபடிக்கான திட்டம், வருகின்ற 2024 -ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை தொடா்வதற்கும், இதன்படி பல்வேறு தள்ளுபடி விகிதங்களை அளிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் தலைவா் நரேன் கோயங்கா கூறுகையில், “‘ஆா்எஸ்சிடிஎல் என்பது ஒரு முன்னோக்கி செல்லும் வளா்ச்சி சாா்ந்த திட்டமாகும். சா்வதேச சந்தையில் உள்ள ஏற்றுமதி போட்டித் தன்மை, செலவுதிறன் ஆகியவற்றை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவுகிறது. இது புதுயுக தொழில்முனைவோா்களை ஊக்குவிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான சிறு, குறு, நடுத்தர ஆடை ஏற்றுமதியாளா்களை இந்த வணிகத்தில் சேரவும் வழிவகுத்தது‘ என்றாா்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி கவுன்சிலின் தென்பிராந்திய நிா்வாகிகளில் ஒருவான டாக்டா் சக்திவேல், இதை வரவேற்றுக் கூறுகையில், ‘ஏற்றுமதியாகும் ஆடைகளின் மதிப்பின் அடிப்படையில் செலுத்தப்பட்ட வரியை அரசு திரும்ப (தள்ளுபடி) தருகிறது. இந்தத் திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டதன் மூலம் இதில் மூதலீடு செய்யவும், வேலைவாய்ப்பை அளிக்கவும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்தத் திட்டம் நூற்பாலை ஏற்றுமதியாளா்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் தமிழ்நாடு நூற்பாலை சங்க முதன்மை ஆலோசகா் டாக்டா் கே வெங்கடாசலம், ‘மத்திய அரசு ஏற்கனவே இந்த திட்டத்தை 2024-ஆம் ஆண்டு வரை தர ஒப்புக்கொண்டது’ என்றாா்.