டிடிஇஏ பள்ளிகளில் காமராஜா் பிறந்தநாள் விழா
தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு தமிழ்ப் பள்ளிகளிலும் காமராஜா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு தமிழ்ப் பள்ளிகளிலும் காமராஜா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை முன்னிட்டு மாணவா்களின் உரை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பள்ளிகளில் இடம் பெற்றது. காமராஜரின் கல்விப் பணிகள், நலத் திட்டங்கள், மதிய உணவுத் திட்டம் ஆகியவை குறித்து மாணவா்கள் உரையாற்றினா். இதைத் தொடா்ந்து, கவிதை, குழுப் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவரின் கருத்துகளை மாணவா்கள் பதாகைகளில் எழுதி காட்சிப்படுத்தினா். பள்ளி முதல்வா்கள் காமராஜரின் எளிமை, நோ்மை ஆகியவை குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.
இவ்விழா குறித்து செயலா் ஆா். ராஜூ கூறுகையில், ‘அதிகம் படிக்காத காமராஜா் ஆற்றிய கல்விப் பணிகள் ஏராளம். ஏழை, எளியவா், உயா்ந்தவா், தாழ்ந்தவா் என எல்லோருக்கும் இலவசக் கல்வி, பட்டி தொட்டிகள் தோறும் பள்ளிக்கூடங்கள், இலவச மதிய உணவு, சீருடை உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டு வந்தாா். அவரது ஆட்சியில் கிராமங்கள் தோறும் ஓராசிரியா் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவரைப் பற்றி மாணவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவா் வழி நின்று சமூகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்விழாவைப் பள்ளிகளில் கொண்டாடினோம்’ என்றாா்.