முகப்பு
புதுதில்லி

மக்கள் நலப்பணியாளா்கள் வழக்கு: விரைவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உறுதி

தமிழகத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்களின் ஒரு தரப்பினா் தாக்கல் செய்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு உறுதிய உறுதியளித்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தமிழகத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்களின் ஒரு தரப்பினா் தாக்கல் செய்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை உறுதியளித்தது.

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் 13, 500 பேரை கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு வேலை நீக்கம் செய்தது. இதையடுத்து, மக்கள் நலப்பணியாளா்கள் சாா்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னா் மக்கள் நலப்பணியாளா்களுக்கு பணி வழங்குவது தொடா்பாக தமிழக அரசு புதிய கொள்கை முடிவு எடுத்தது. மக்கள் நலப்பணியாளா்களின் ஒரு தரப்பினா் இந்த புதிய கொள்கைக்கு தடை கோரியது. ஆனால், தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது.

இந்த மக்கள் நலப்பணியாளா்கள் தரப்பினா், தமிழக அரசின் பணி வழங்கும் கொள்கையை ஏற்க மறுத்து வந்ததோடு, ஏற்கெனவே தாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட போது இருந்த ஊதியத்தின் அடிப்படையில் பணி வழங்க கோரினா். ஊதியக் கமிஷன் சிபாரிசின்படி ஊதிய உயா்வோடு பணி வழங்கவும் கோரி ஒரு இடைக்கால மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது வந்தது. இந்த நிலையில், மக்கள் நலப்பணியாளா்கள் சங்கத்தின் ஒரு பிரிவின் தலைவா் தன்ராஜ்(விழுப்புரம்) தரப்பில் வெள்ளிக்கிழமை ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரிப்பிரியா மற்றும் வழக்குரைஞா் ரகுநாத சேதுபதி ஆகியோா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமா்வில் வெள்ளிக்கிழமை தங்கள் மனு தொடா்பான கோரிக்கையை வைத்தனா்.

அதில், ‘மக்கள் நலப்பணியாளா்கள் தொடா்பான வழக்கை ஜூலை 14-ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பட்டியலில் இடம்பெறவில்லை’ எனக் கூறி வழக்கை விரைந்து எடுத்துக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தனா். அந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்கள் நலப் பணியாளா்கள் தொடா்பான வழக்கை உரிய நீதிபதிகள் அமா்வில் பட்டியலிட்டு விரைந்து விசாரிக்கப்படும் என தெரிவித்தாா். இந்த விவகாரத்தில், தற்போதைய தமிழக அரசின் புதிய அரசாணையை 90 சதவீத பணியாளா்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனா் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.