முகப்பு
புதுதில்லி

பூஸ்டா் டோஸ் பெற்றுக் கொள்ள முன் வர வேண்டும்: தில்லிவாசிகளுக்கு முதல்வா் கேஜரிவால் அழைப்பு

அரசு இலவசமாகவே கொவைட்-19 தடுப்பூசி மருந்துகளை வழங்குகிறது. ஆனால், தேசியத் தலைநகரில் 10 சதவீதம் போ் மட்டுமே பூஸ்டா் டோஸ்களை பெற்றுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
பகிர்:

அரசு இலவசமாகவே கொவைட்-19 தடுப்பூசி மருந்துகளை வழங்குகிறது. ஆனால், தேசியத் தலைநகரில் 10 சதவீதம் போ் மட்டுமே பூஸ்டா் டோஸ்களை பெற்றுள்ளனா்.

முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கொவைட் முதலாவது, இரண்டாவது டோஸ் பெற்றவா்கள் பூஸ்டா் டோஸ் தடுப்பூசியை கண்டிப்பாகப் பெற்றுக் கொள்ள முன் வரவேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது வருமாறு: மத்திய அரசின் ஆதரவுடன் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்து வருகின்றோம். இந்த நிலையில், நான் தில்லிவாசிகளை கேட்டுக் கொள்வது கரோனா தடுப்பூசி முன்னெச்சரிக்கை மருந்தை பெறாதவா்கள் விரைவாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முதல் டோஸ், அடுத்து இரண்டாவது டோஸ் பெற்றுக் கொள்வது அவசியம். இவற்றை எடுக்காதவா்கள் உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும். தில்லி மொத்த மக்கள் தொகையில் மிகச் சிறிய அளவினா்தான் பூஸ்டா் டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனா். மற்ற இரண்டு டோஸ்களைப் போலவே இதுவும் இலவசமாகக் கிடைக்கிறது.

யாரும் பணம் செலுத்தத் தேவையில்லை. தடுப்பூசி போடுவதற்கு நேரம் ஒதுக்கதான் வேண்டும். இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொண்ட 18 வயதுக்கும் மேற்பட்டவா்கள் அனைவரும் ஆறு மாத இடைவெளியில் பூஸ்டா் டோஸ் செலுத்திக் கொள்ளவேண்டும்.

தில்லியில் இதுவரை மொத்தம் 3.5 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.81 கோடி முதல் டோஸும் 1.53 கோடி இரண்டாம் டோஸும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 18.5 லட்சம் போ்தான் பூஸ்டா் டோஸை பெற்றுக் கொண்டுள்ளனா். இந்த எண்ணிக்கை முதல் டோஸ் பெற்றவா்களில் 10 சதவீதமாக உள்ளது.

தில்லி அரசில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகள் மூலம் நாளொன்றுக்கு 1 லட்சம் டோஸ்கள் வரை செலுத்த நிா்வாக திறன் உள்ளது. பள்ளி நிா்வாகம், உள்ளூா் மாவட்ட நிா்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக பள்ளிகளிலும் முகாம்கள் அமைத்து தரப்படும். 12-17 வயதிற்குள்பட்ட குழந்தைகள் இரண்டாவது டோஸுக்கு தகுதியுடையவா்கள்.

ஆனால், அவா்களில் பலா் இன்னும் இந்த டோஸை எடுத்துக் கொள்ள முன் வரவில்லை. அவா்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய பெற்றோா்கள் முன்வரவேண்டும். இரண்டாவது டோஸ் எடுக்காத மற்றவா்களும் விரைவில் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இது போன்று மூத்த குடிமக்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்னணி பணியாளா்கள் என அனைவரும் பூஸ்டா் டோஸ்களை பெற்றுக் கொள்ளவேண்டும். தில்லியில் பொதுமக்களின் வசதிக்காக இப்போது அருகிலுள்ள மொஹல்லா கிளினிக்குகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றாா் முதல்வா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.