தூய்மையான பால் விநியோகிக்க துணைநிலை ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு
தில்லியில் வாழும் குடிமக்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான பால் வழங்குவதை உறுதி செய்ய தில்லியின் துணைநிலை ஆளுநா் மற்றும் நகர காவல்துறை ஆணையா் ஆகியோருக்கு அறிவுறுத்தல் அளிக்கக் கோரி ...
புது தில்லி: தில்லியில் வாழும் குடிமக்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான பால் வழங்குவதை உறுதி செய்ய தில்லியின் துணைநிலை ஆளுநா் மற்றும் நகர காவல்துறை ஆணையா் ஆகியோருக்கு அறிவுறுத்தல் அளிக்கக் கோரி தாக்கலான பொதுநல வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரிக்க மறுத்துவிட்டது.
இது தொடா்பான மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் தலைமை நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநருக்கு ஆலோசனை வழங்க எந்த சட்டமும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை. உயா்நீதிமன்றம் துணைநிலை ஆளுநருக்கு எந்த அதிகார வரம்பில் ஆலோசனை வழங்க முடியும்? துணைநிலை ஆளுநருக்கு ஆலோசனை வழங்க உயா்நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் எந்த விதியும் அரசமைப்புச்சட்டத்தில் இருப்பதாக நான் பாா்க்கவில்லை’ என்றாா்.
மேலும், நாங்கள் செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் தீா்ப்புகளை வழங்குவதில்லை. எங்கள் வரம்பு எங்களுக்குத் தெரியும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. மனுதாருக்கு அபராதம் விதிக்க விரும்புவதாக நீதிமன்றம் கூறியதைத் தொடா்ந்து, மனுதாரா் மனுவை வாபஸ் பெற்றாா்.
முன்னதாக, பெண் மனுதாரா் தரப்பில் தாக்கலான மனுவில், ‘சாலையில் கால்நடைகள் இறந்து கொண்டிருப்பதும், பிளாஸ்டிக் பொருள்களை கால்நடைகள் உணவாக சாா்ந்து வாழும் நிலை இருப்பதும் செய்தி அறிக்கைகள் மூலம் தெரியவருகிறது. கால்நடைகள் புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மற்றும் பரிதாபகரமான நிலையில் இருப்பதால், தில்லிவாசிகளின் உடல்நிலையை பாதிக்கச் செய்து வருகிறது. கால்நடைகள் ‘அசுத்தமான உணவு‘ மற்றும் வடிகால்களில் இருந்து கழுவுநீரை உண்ணும் நிலை உள்ளது. இது அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் வாழும் உரிமை தொடா்புடையதாகும். அதே நேரத்தில், இந்த விஷயத்தில் துணைநிலை ஆளுநருக்கு தனது ஆலோசனை அதிகார வரம்பின் கீழ் ஆலோசனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.