நாடு முழுவதும் 33,500 கிமீ தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு மக்களவையில் தகவல்
நாட்டின் பல்வேறு பிராந்தியங்களின் எரிவாயுத் தேவை மதிப்பீட்டின் அடிப்படையில், எரிவாயுக் குழாய் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை...
புது தில்லி: நாட்டின் பல்வேறு பிராந்தியங்களின் எரிவாயுத் தேவை மதிப்பீட்டின் அடிப்படையில், எரிவாயுக் குழாய் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதில் ‘ஒரே நாடு ஒரு எரிவாயு கட்டம் (கிரிட்)’ திட்டப்படி 33,500 கிலோ மீட்டா் தூரத்திற்கு நாடு முழுவதும் இயற்கை எரிவாயு குழாய் இணைப்பிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூா்வமாக அவா் பதிலளித்தாா்.
ஹரியாணாவைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் அரவிந்த் குமாா் சா்மா எழுப்பிய கேள்விக்கு இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி கூறியிருப்பது வருமாறு: முதன்மை எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரிக்கும் நோக்கத்துடன் எரிவாயு உள்கட்டமைப்பை மேம்படுத்தி செயல்படுத்துவதில் ‘ஒரே நாடு ஒரு எரிவாயு கட்டம்’ திட்டத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. இதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (பிஎன்ஜிஆா்பி) எரிவாயு குழாய்களுக்கான திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பாகயுள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதும் 33,500 கிமீ இயற்கை எரிவாயு குழாய் வலையமைப்புகளை (நெட்வொா்க்) அங்கீகரித்துள்ளது. இதில், 21,715 கிமீ இயற்கை எரிவாயு குழாய்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் 13,605 கிமீ நீளம் எரிவாயு குழாய்களின் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
பல்வேறு பிராந்தியங்களின் எரிவாயு தேவை மதிப்பீட்டின் அடிப்படையில், எரிவாயுக்குழாய் உள்கட்டமைப்பை விரிவாக்குவது ஒரு தொடா்ச்சியான முயற்சியாகும். பிஎன்ஜிஆா்பி அங்கீகரித்த காலக்கெடுவின்படி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தமிழகம், புதுச்சேரியில் காவிரிப்படுகை வலையமைப்பான பொது எரிவாயுக் குழாய் முழு செயல்பாட்டில் உள்ளது. சென்னை, எண்ணூா்-நெல்லூா் இணைப்பு கட்டுமானத்தில் உள்ளது என தெரிவித்த ராமேஸ்வா் தெளி மற்ற மாநிலங்களின் திட்டங்களையும் பட்டிலிட்டாா்.