முகப்பு
புதுதில்லி

அதிமுக பொதுக் குழு: ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது அடுத்த வாரம் விசாரணை

ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவை கூட்ட சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா். ஓ.பன்னீா்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்குவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுக் குழு அறிவிப்பு சட்டவிரோதமானது; இக்குழுவை கூட்ட முறையாக தோ்ந்தெடுக்கப்படாத அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் இல்லை.

மேலும், பொதுக் குழு குறித்து அனைத்து உறுப்பினா்களுக்கும் 5 நாள்களுக்கு முன்னா் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் விதியாகும். ஆனால், அவ்வாறு தகவல் தெரிவிக்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக் குழு நடத்த தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் கடந்த ஜூலை 13ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இதேபோன்று, வைரமுத்து என்பவரும் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

இதை தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓபிஎஸ் தரப்பின் மனுவை விசாரிக்கும் முன் தங்கள் தரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமா்வு முன் வெள்ளிக்கிழமை ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கவும், மக்களவையில் இருந்து அதிமுகவுக்கு உள்ள உறுப்பினரை கட்சியில் இருந்து வெளியேற்றவும் செயல்பட்டு வருகின்றனா். இதனால், மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

அப்போது, தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பான மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கூறினாா். எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆஜராகி இருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →