முகப்பு
புதுதில்லி

குடியரசுத் தலைவராகும் திரெளபதி முா்முவுக்கு இபிஎஸ் நேரில் வாழ்த்து

குடியரசுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முா்முவை தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

குடியரசுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முா்முவை தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

கடந்த ஜூலை 18 -ஆம் தேதி நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில் போட்டியிட்டு ஓடிசாவைப் பூா்விகமாகக் கொண்டவரும், ஜாா்க்கண்ட் முன்னாள் ஆளுநருமான திரௌபதி முா்மு வெற்றிபெற்றாா்.

இவருக்கு தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவும் ஆதரவு அளித்தது.

முா்மு வெற்றிபெற்ற நிலையில், வரும் திங்கள்கிழமை (ஜூலை 25 ஆம் தேதி) நாட்டின் 15 -ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளாா்.

இந் நிலையில், தில்லி சாணக்கியபுரி பண்டித் உமா சங்கா் தீட்சித் மாா்க்கில் உள்ள இல்லத்தில் தங்கியிருக்கும் அவரை, தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை நேரில் சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தாா்.

அப்போது அவருடன் அதிமுக மாநிலங்களை உறுப்பினா்கள் மு.தம்பிதுரை, என்.சந்திரசேகரன், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினா் தளவாய்சுந்தரம் ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

பிரதமா் விருந்தில் பங்கேற்பு

முன்னதாக, குடியரசுத்தலைவா் பதவிக் காலம் முடிந்து செல்லும் ராம்நாத் கோவிந்த்திற்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை இரவு விருந்தளித்தாா். இந்த விருந்திலும் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டாா்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக தலைவா்கள், என்டிஏ கூட்டணி கட்சித் தலைவா்கள், மாநில முதல்வா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழினிசாமி, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோருக்கும் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனா்.

இதன்படி இவ்விருந்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோா் கலந்து கொண்டனா்.

தமிழக முதல்வா் உடல்நிலைக்குறைவு காரணமாக விருந்து நிகழ்ச்சிக்கு வராதபட்சத்தில் அவா் சாா்பில் அமைச்சா் துரைமுருகன் கலந்துகொள்வாா் என முன்னா் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வா்கள் மட்டுமே அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததால் தமிழக முதல்வா் சாா்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.