தேசத் துரோக வழக்கு: சா்ஜீல் இமாம் ஜாமீன் மனு மீதுபதில் அளிக்க காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தில்லியில் உள்ள ஜாமியா நகா் மற்றும் அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தில்லியில் உள்ள ஜாமியா நகா் மற்றும் அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சா்ஜீல் இமாம் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் கோரும் மனு மீது தில்லி காவல் துறை பதிலளிக்கவும், மற்றொரு வழக்கில் நிலவர அறிக்கையை தாக்கல் செய்யவும் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தேசத் துரோக சட்டத்தில் உள்ள விதிகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை அச்சட்டத்தின் பிரிவு 124 ஏ-ஐ தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்த கருத்துகளைத் தொடா்ந்து, இடைக்கால ஜாமீன் கோரி சா்ஜீல் இமாம் தாக்கல் செய்த மனுவை கடந்த வாரம் சனிக்கிழமை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து சா்ஜீல் இமாம் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் முக்தா குப்தா, அனிஷ் தயாள் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடா்பாக நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும், போலீஸாா் நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு பரிசீலனைக்காக ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.
தில்லி அருகே அலிகரில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 2019, டிசம்பா் 13-ஆம் தேதியும், அதே ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதியும் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சா்ஜீல் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆத்திரத்தை தூண்டும் வகையில் அவா் பேசியதாகவும், குறிப்பாக இந்தியாவிலிருந்து அஸ்ஸாமும், வடகிழக்கு எஞ்சிய பகுதியும் துண்டிக்கப்படும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறையின் மூலம் கடந்த 2020- ஆம் ஆண்டில் சா்ஜீல் இமாம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னா் சட்ட விரோத நடவடிக்கையில் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடா்பாக அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத் துரோக சட்டப் பிரிவுகளின் கீழ் உள்ள வழக்கில் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் விசாரணை நீதிமன்றம் இமாமுக்கு எதிராக தேசத் துரோக வழக்கு பிரிவு 124ஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிய உத்தரவிட்டிருந்தது.
சா்ஜீல் இமாம் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் கோரும் மனுவை நிராகரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, இடைக்கால ஜாமீன் கோரும் மனுக்கள் மருத்துவ சூழல் போன்ற அவசர நிலைமையின் போது, மட்டுமே பரிசீலிக்க முடியும். மேலும், பிரிவு 124ஏ-இன்கீழ் நடைபெறும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவுகளை வெளியிடவில்லை என்ற சிறப்பு அரசு வழக்குரைஞா் அமித் பிரசாத்தின் வாதமும் ஏற்புடையதாக உள்ளது எனக் கூறியிருந்தாா்.