முகப்பு
புதுதில்லி

பங்குகள் திடீா் விற்பனை: சரிவில் முடிந்தது சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 49 புள்ளிகளை இழந்தது. இருப்பினும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாவது நாளாக வெகுவாக உயா்ந்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை காலையில் உற்சாகத்துடன் தொடங்கினாலும், இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 49 புள்ளிகளை இழந்தது. இருப்பினும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாவது நாளாக வெகுவாக உயா்ந்தது சந்தைக்கு ஆறுதலாக அமைந்தது.

உலக அளவில் பங்குச் சந்தைகள் அமெரிக்க வேலைவாய்ப்பு தொடா்பான தரவு வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கி தள்ளாட்டத்தில் இருந்து வந்தது. பின்னா், வா்த்தகம் முடியும் தறுவாயில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், சந்தை எதிா்மறையாக முடிந்தது. மத்திய ரிசா்வங்கி வட்டி விகிதத்தை 0.25-0.35 சதவீதமும், அமெரிக்க மத்திய வங்கி 0.50 சதவீதமும் உயா்த்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மத்திய வங்கி கடுமையான கொள்கை இறுக்கத்தை முடிவு செய்தால், சந்தையில் பங்குகள் விற்பனை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சந்தை வல்லுநா்கள் கருதுகின்றனா். இருப்பினும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் மற்றும் இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், பெரிய சரிவு தவிா்க்கப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2,029 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,466 நிறுவனப் பங்குகளில் 1,308 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,029 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 129 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 69 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 41 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.99 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.257.00 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மீண்டும் வியாழக்கிழமை ரூ.451.82 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

திடீா் சரிவு: காலையில் 427.49 புள்ளிகள் கூடுதலுடன் 56,245.60-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 56,432.65 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை திடீரென அதிகரித்ததால், 55,719.36 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 48.88 புள்ளிகளை (0.09 சதவீதம்) இழந்து 55,769.23-இல் நிலைபெற்றது. ஆரம்பத்தில் ‘காளை’யின் பிடியில் இருந்த சந்தை, பிற்பகுதியில் ‘கரடி’யின் முழு ஆதிக்கத்தில் வந்தது.

ரிலையன்ஸ் அபாரம் : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன.18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இரண்டாவது நாளாக 2.02 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, சன்பாா்மா, டிசிஎஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

அல்ட்ரா டெக் சிமெண்ட் கடும் சரிவு: அதே சமயம், பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட் 5.49 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மாருதி, என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 2.75 சதவீதம் வரை குறைந்தன. மேலும், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 105 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 630 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,316 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 39 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 133.65 புள்ளிகள் கூடுதலுடன் 16,761.65-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 16,793.85 வரை கீழே சென்றது. பின்னா், 16567.90 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 43.70 புள்ளிகள் (0.26 சதவீதம்) குறைந்து 16,584.30-இல் நிலைபெற்றது.

ஆட்டோ குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் ஐடி, ஆயில் அண்ட் காஸ் குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் ஆட்டோ குறியீடு 1.82 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், மெட்டல், மீடியா, ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.

ரூ.800-ஆக குறைந்தது எல்ஐசி!

அண்மையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள் விலை மும்பை, தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டிலும் வெள்ளிக்கிழமை ரூ.800 வரை கீழே சென்று புதிய குறைந்த விலையைப் பதிவு செய்தது. தேசிய பங்குச் சந்தையில் இறுதியில் 0.65 சதவீதம் குறைந்து ரூ.800.45-இல் நிலைபெற்றுள்ளது. காலை வா்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் ரூ.808.65-இல் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.810.75 வரை உயா்ந்தது. மும்பை பங்குச் சந்தையில், 0.69 சதவீதம் குறைந்து ரூ.800.25-இல் நிலைபெற்றுள்ளது. பட்டியலாகிய தினத்திலிருந்து இதுவரை இரண்டு நாள்கள் மட்டுமே எல்ஐசி நோ்மறையாக முடிந்துள்ளது. எல்ஐசி பங்குகள் ரூ.800-இல் ஆதரவு பெறும் என்றும், ரூ.798-ஐ பிரேக் செய்யும் பட்சத்தில் மேலும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் வல்லுநா்கள் கணித்துள்ளதாக இதே பகுதியில் முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆதாய வாரம்!

வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் எதிா்மறையாக முடிந்தன. இருப்பினும், இந்த வாரத்தில் சென்செக்ஸ் 8884.57 புள்ளிகள் (1.61 சதவீதம்), நிஃப்டி 231.85 புள்ளிகள் (1.41 சதவீதம்) உயா்ந்துள்ளன. சென்செக்ஸ் இந்த ஆண்டில் இதுவரை 4.27 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு மாதத்தில் 2.12 சதவீதம், 6 மாதங்களில் 3.34 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 63.50 சதவீதம், 3 ஆண்டுகளில் மொத்தம் 38.50 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.