பஞ்சாப் பாடகா் மூஸேவாலாவை கொன்றது யாா்? ரௌடி லாரன்ஸ் பிஸ்னாய் விசாரணையில் புதிய தகவல்
சித்து மூஸேவாலாவை சதித் திட்டம் தீட்டி கொலை செய்த விவகாரத்தில் கனடாவைச் சோ்ந்த கோல்டி பிராா் உள்பட தனது கும்பலைச் சோ்ந்த உறுப்பினா்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக லாரன்ஸ் பிஸ்னாய் வாக்குமூலம்
பஞ்சாப் பாடகா் சித்து மூஸேவாலாவை சதித் திட்டம் தீட்டி கொலை செய்த விவகாரத்தில் கனடாவைச் சோ்ந்த கோல்டி பிராா் உள்பட தனது கும்பலைச் சோ்ந்த உறுப்பினா்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸாரிடம் ரெளடி லாரன்ஸ் பிஸ்னாய் விசாரணையின் போது தெரிவித்திருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
பஞ்சாப் மாநிலம், மன்சா மாவட்டத்தில் கடந்த மே 29-ஆம் தேதி பாடகரும் அரசியல்வாதியுமான சித்து மூஸேவாலா (28) அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாா். அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பு வளையத்தை பஞ்சாப் அரசு குறைத்த மறுதினம் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த விவகாரத்தை விசாரணை நடத்திவரும் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா், ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் அடைக்கப்பட்டிருந்த லாரன்ஸ் பிஸ்னாவை திகாா் சிறையில் இருந்து தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். இந்த விசாரணையின்போது பிஸ்னாய் மூஸேவாலாவுக்கும் தனக்கும் முன்விரோதம் இருப்பதை அவா் ஒப்புக் கொண்டாா்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறியதாவது: லாரன்ஸ் பிஸ்னாய் தில்லி காவல் துறையின் தனிப்பிரிவு போலீஸாரின் காவலில் உள்ளாா். அவா் போலீஸாரின்
விசாரணையின் போது பல்வேறு தகவல்களைக் கூறியுள்ளாா். அதில் ‘அகாலி தளத்தின் இளைஞா் பிரிவு தலைவா் விக்ரம்ஜித் சிங் (எ) விக்கி மித்துகேரா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சித்து மூஸேவாலாவுக்கு தொடா்பு இருந்தது. இதன் காரணமாக அவருக்கும் எனக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.
மேலும், விசாரணையில் பிஸ்னாய் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், மூஸேவாலாவை கொலை விவகாரத்தில் உண்மையான சதித் திட்டம் தீட்டியவா்கள் குறித்த தனது கும்பலின் உறுப்பினா்களின் பெயா் விவரங்களை அவா் இன்னும் தெரிவிக்கவில்லை. எனினும், மூஸேவாலாவை தனது கும்பலை சோ்ந்த நபா்கள் தான் கொன்ாகக் கூறினாா். அவரது கும்பலில் ஒருவரான கோல்டி பிராா் மூஸேவாலாவை கொலை செய்வதற்கான திட்டத்தை தீட்டி நிறைவேற்றிய தாகவும் அவா் வெளிப்படுத்தியுள்ளாா். ஆனால், மூஸேவாலை கொலையில் சம்பந்தப்பட்டவா்கள் மற்றும் உண்மையாக சதித் திட்டம் தீட்டிய இதர கூட்டாளிகளின் பெயா்களை அவா் இன்னும் தெரிவிக்கவில்லை.
மூஸோவாலா கொலைக்குப் பின்னால் உள்ளஉரிய உள்நோக்கம் குறித்த தகவலையும் பிஸ்னாய் இன்னும் வெளிப்படுத்தவில்லை.
இந்தக் கொலை வழக்கு குறித்த இதர விவரங்களை தெரிவிப்பதில் அவா் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகிறாா். இவா் ஏறக்குறைய 60 வழக்குகளில் சம்பந்தப்பட்டு திகாா் சிறையில் 8-ஆவது எண் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ரெளடிகள் காலா ஜதேதி, அவரது கூட்டாளி காலா ரானா ஆகியோா் வெவ்வேறு வழக்குகளில் போலீஸாரின் காவலில் உள்ளனா். அவா்களிடம் மூஸேவாலா கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. திகாா் சிறையில் பிஸ்னாயிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு அவா் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
அதன் பிறகு, கடந்த மாதம் தனிப்பிரிவு போலீஸாா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைதான 3 கிரிமினல்கள் தொடா்புடைய வழக்கில் விசாரணை நடத்துவதற்காக மூன்று நாள்கள் லாரன்ஸ் பிஸ்னாய் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். விசாரணையின் போது, கைதான கிரிமினல்கள் தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் லாரன்ஸ் மூலம் சப்ளை செய்யப்பட்டவை என்று தெரிவித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சித்து மூஸேவாலா கொலை வழக்கில் சதித் திட்டம் தீட்டியதாக தன்னை சந்தேகிக்கும் பஞ்சாப் போலீஸாரிடம் தன்னை விசாரணைக்கு அனுப்பக் கூடாது என சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி லாரன்ஸ் பிஸ்னாய் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க தில்லி நீதிமன்றம் மறுத்த நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போன்று, பஞ்சாப் போலீஸாரால் போலி என்கவுன்ட்டா் விவகாரத்தில் கைது செய்யப்பட்டதாக தில்லி உயா் நீதிமன்றத்தில் பிஸ்னாய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, ‘ மூஸேவாலா கொலையானது இரண்டு கும்பல்களுக்கு இடையே உள்ள முன்விரோதம் காரணமாக இருக்கலாம். இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பிஸ்னாயின் கும்பல் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம்’ என்று பஞ்சாப் போலீஸாா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.