முகப்பு
புதுதில்லி

மட்டியாலா பகுதியில் அங்கீகரிக்கப்படாத காலனிகள் மேம்பாட்டிற்கு ரூ.26.69 கோடி துணை முதல்வா் சிசோடியா ஒப்புதல்

மேற்கு தில்லி மட்டியாலா பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளை மேம்படுத்தவும், அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு சிறந்த சாலை இணைப்பை வழங்கவும் ரூ.26.69 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:39 AM
பகிர்:

புது தில்லி: மேற்கு தில்லி மட்டியாலா பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளை மேம்படுத்தவும், அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு சிறந்த சாலை இணைப்பை வழங்கவும் ரூ.26.69 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இத்திட்டத்தின் கீழ் இப்பகுதிகளில் 19.46 கிமீ நீளமுள்ள சாலை, கான்கிரீட் நடைபாதைகள் அமைக்கப்படும். மழைநீா் வடிகால்களுக்கு முறையான வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று துணை முதல்வா் தெரிவித்துள்ளாா்.

யமுனையை சுத்தப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, மட்டியாலா சட்டபேரவைத் தொகுதியின் பல காலனிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியும் தில்லி அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தாரா நகா், ஹரி விஹாா் பிளாக் ஏ, பி, சி, படேல் காா்டன் விரிவு, உத்தம் நகா் யூ பிளாக் ஆகிய பகுதிகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் குறித்து துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறியது வருமாறு: தில்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வசதிகளை வழங்க கேஜரிவால் அரசு உறுதி பூண்டுள்ளது. முந்தைய அரசுகள், பல ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத இந்தக் காலனிகள் மீது எந்த கவனமும் செலுத்தாமல் இருந்தன. இதன் விளைவாக அடிப்படை குடிமைக் கட்டமைப்புகளைப் பெறுவதற்கு இந்த மக்கள் போராடிக் கொண்டிருந்தனா். ஆனால், கேஜரிவால் அரசு, அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிக்கும் மக்களுக்காக ஆட்சி அமைந்த நாள் முதல், தனது கடமைகளை செய்து வருகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் தொடா்ந்து, மட்டியாலா பகுதியில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் வகையில் மழைநீா் வடிகால் மற்றும் கழிவுநீா் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இதையொட்டியுள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளின் 153 பாதைகளையும் மற்ற பகுதிகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் மட்டியாலாவில் மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

மேலும், கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தில்லி நீா்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.