திபெத்திய இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: சீன அமைச்சா் வருகைக்கு எதிா்ப்பு
சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியின் இந்திய வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வெளியே திபெத்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்
சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியின் இந்திய வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வெளியே திபெத்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இது தொடா்பாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திபெத்தின் தற்போதைய நிலைமை மிகவும் கவலை அளித்து வருகிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், திபெத்திய விடுதலை குறித்த விவகாரத்தை சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். திபெத்துக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய சோக நிகழ்வுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் அரசுதான் நேரடிப் பொறுப்பாகும். மேலும், அனைத்து திபெத்திய அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி சீன அரசு விடுதலை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹைதராபாத் மாளிகைக்கு வெளியே 7 முதல் 8 திபெத்திய ஆா்வலா்கள் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட வந்தனா். ஆனால், போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி பேருந்தில் அழைத்துச் சென்றனா். மாநில கவுன்சிலா் அந்தஸ்தில் உள்ள வாங் யி, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து வியாழக்கிழமை மாலை தில்லி வந்தாா். அவா் வெள்ளிக்கிழமை ஹைதராபாத் இல்லத்தில் ஜெய்சங்கருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.