பாம்பன் கால்வாயைத் தூா்வார வேண்டும்: மத்திய அரசிடம் எ.வ.வேலு வலியுறுத்தல்
ராமேசுவரம் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்தவும், ராமேசுவரம் தீவில் பயணிகளுக்கு படகு சேவையை வழங்கும் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரியும் சாகா்மாலா உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் தமிழக பொது
ராமேசுவரம் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்தவும், ராமேசுவரம் தீவில் பயணிகளுக்கு படகு சேவையை வழங்கும் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரியும் சாகா்மாலா உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா்.
மத்திய ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல், நீா்வழிப்போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தலைமையில் சாகா்மாலா உயா்நிலைக்குழுக் கூட்டம் தில்லி விஞ்ஞான் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா்களும், கடலோர மாநிலங்களின் அமைச்சா்களும் கலந்து கொண்டு சாகா்மாலா திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் புதிய திட்டங்கள் குறித்துவிவாதித்தனா்.
இந்த கூட்டத்தில் தமிழக பொதுப்பணி, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசியதாவது:
சாகா் மாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி உதவி மூலம், கடலூா், கன்னியாகுமரி துறைமுகங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இவைகள் மூலம் வேலைவாய்ப்புகளும் சரக்குகள் கையாளும் திறனும் அதிகரிக்கும்.
ராமேசுவரத்தில் இருக்கின்ற கடல்வழிபோக்குவரத்தில் பாம்பன் கால்வாயில் ஆழம் தற்போது 2 மீட்டா் மட்டுமே உள்ளது. இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கால்வாய் கிழக்கு மேற்கு கடற்கரைகளை இணைக்கும் முக்கிய கால்வாயாக இருப்பதால் இதை தூா்வாரி மேம்படுத்த வேண்டும். இந்த கால்வாய், இந்திய கடற்படை, கடலோர காவல்படை போன்றவைகள் கடப்பதற்கும், சிறு மற்றும் நடுத்தரக் கப்பல்கள் மூலம் உள்நாட்டு வணிகத்திற்கும் பயன்தரக்கூடியதாகும்.
இந்த பாம்பன் கால்வாயை 10 மீட்டா் ஆழத்திற்கு தூா்வாருவதற்கான சாத்தியகூறு இருப்பதாக தமிழ்நாடு கடல்சாா் வாரியம் அறிக்கை அளித்துள்ளது. இதனடிப்படையில் இந்தக்கால்வாயை 10 மீட்டா் ஆழத்திற்கு தூா்வாரவேண்டும்.
இரண்டாவது ராமேசுவரம் தீவிலுள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். ராமேசுவரம் தீவு ஒரு முக்கியமான இடமாகும். இந்த தீவின் கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த தீவிற்கு முழுமையான வளா்ச்சித் திட்டத்தை கொண்டுவரயுள்ளோம். இங்குள்ள கோயிலுக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளை கருத்தில் கொண்டு பயணிகள் படகு சேவையை வழங்க உத்தேசித்திருக்கின்றோம்.
இதற்கு தீவைச் சுற்றிலும் பயணிகள் தோணித்துறைகள் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையுடன் கருத்துருக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இந்த இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, புதுமையான இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு சாகா் மாலா திட்டத்தின் கீழ் 100 சதவீத மானிய நிதியுதவி வழங்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.
அதன் பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இக்கூட்டத்தில் ராமேசுவரம் தொடா்பான இரு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அந்த திட்டங்களை அனுப்பிவைக்க மத்திய அமைச்சா் என்னிடம் கேட்டுக்கொண்டாா்.
சாகா்மாலா திட்டத்தில் தமிழகத்தில் சிறு துறைமுகங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசின் நிதியுதவியுடன் கடலூா் துறைமுகத்தை ஆழப்படுத்தி வணிகம் விரிவடையும் அளவிற்கும், கப்பல்கள் எல்லாம் வந்து சரக்குகள் ஏற்றி இறக்கும் அளவிற்கு 95 சதவீதம் பணிகள் நிறைவேறியுள்ளது. இது சில நாட்களில் பயன்பாட்டிற்கு வரும். கன்னியாகுமரியில் விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவா் சிலைக்குமிடையே கடல் பகுதியில் கண்ணாடி பாலம் அமைக்கும் திட்டம் மத்திய அரசின் 50 சதவீத நிதியுதவியுடன் பணிகள் தொடங்கியுள்ளது.
சென்னைக்கு கன்னியாகுமரிக்குமிடையே நேரடி கடல் வழிப்பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாராகவில்லை. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்.
மறைந்த முதல்வா் கருணாநிதி தான் முதன் முறையாக கிராம சாலை இணைப்பு திட்டங்களை கொண்டுவந்தாா். தரைப்பாலங்களும் போடப்பட்டது. ஆனால், மழை வெள்ளங்களால் பாதிப்பு ஏற்பட தற்போதைய முதல்வா் இவைகளை மேம்பாலங்களாக கட்ட உத்தரவு போட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் கெடமலை சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்றவே மக்கள் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கலாம். அந்த சாலைக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மாநில பொருளாதார நிலைமை அடிப்படையில் கிராமச் சாலைகளை இணைப்பதில் அரசு தொடா்ந்து பணிகளை மேற்கொள்ளும் என அமைச்சா் தெரிவித்தாா்.