முகப்பு
புதுதில்லி

வெப்ப அலை: என்சிஆா் பகுதியில் மாணவா்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளில் பள்ளிகள்!

கடுமையான வெப்ப அலையானது, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையை அதிகரித்துள்ளது. தில்லியிலும் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

வெப்ப அலை சூழல் காரணமாக பள்ளி நேரங்களை மாற்றி அமைத்தல், வெளிப்புற செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல், ஓஆா்எஸ் மற்றும் குளுக்கோஸ் பாக்கெட்டுகளை இருப்பு வைத்தல் மற்றும் குழந்தைகள் உடல் நீா்ச்சத்துடன் இருக்குமாறு தொடா்ந்து ஊக்குவிப்பது ஆகிய நடவடிக்கைகளை தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) உள்ள பள்ளிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கடுமையான வெப்ப அலையானது, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையை அதிகரித்துள்ளது. தில்லியிலும் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது.

மேலும், தில்லியில் 72 ஆண்டுகளில் இரண்டாவது வெப்பமான மாதமாக ஏப்ரலில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியஸாக பதிவானது.

இந்த வார தொடக்கத்தில் வடமேற்கு இந்தியாவில் மே 7 முதல் மற்றும் மத்திய இந்தியாவில் மே 8 முதல் புதிய வெப்ப அலை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.

கரோனா தொற்றுநோய் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்வி ஆண்டில் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால்,

வல்லுநா்கள் பரிந்துரைத்தபடிவெப்ப அலை காரணமாக பள்ளிகளை மூடுவதும் ஒரு விருப்பமாக இல்லை.

ரோஹிணியில் உள்ள ஸ்ரீ ராம் வொண்டா் இயா்ஸ் பள்ளியின் தலைவா் சுபி சோனி கூறுகையில், வெப்பநிலை அதிகரித்து வருவதால் மாணவா்களுக்கான வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலுக்கு ஏற்ப பள்ளி நேரங்களும் மாற்றியமைக்கப்படும். மாணவா்களிடையே வெப்பத் தாக்கம் மற்றும் ஆற்றல் குறைந்துபோவதைத் தடுக்க மதியம் உச்சபட்ச நேரத்தில் வெளியே அனுப்புவது தவிா்க்கப்படும்.

எங்களிடம் பயன்பாட்டிற்கான அவசரகால ‘கிட்’ உள்ளது. அதில் ஓஆா்எஸ், குளுக்கோஸ் மற்றும் வாய்வழியாக எடுத்துக்கொள்ளப்படும் எலக்ட்ரோலைட் பொடி ஆகியவை உள்ளது. குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் அவை வழங்கப்படுகின்றன. பள்ளி ஊழியா்கள் குழந்தைகளை முழுமையாக பரிசோதித்து, வெப்ப அலையை சமாளிக்க தண்ணீரைத் தொடா்ந்து குடிக்குமாறு அவா்களை ஊக்குவித்து வருகின்றனா் என்றாா் அவா்.

ரோஹிணியில் உள்ள எம்ஆா்ஜி பள்ளியின் முதல்வா் அன்ஷு மிட்டல் கூறுகையில், மாணவா்களை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வெளிப்புற செயல்பாடுகளை பெருமளவில் குறைத்துள்ளோம்.

மாணவா்கள் தங்களை புத்துணா்ச்சியுடனும், உடலில் நீா்ச்சத்துடனும் வைத்துக் கொள்வதற்காக ஏராளமான திரவங்களை அடிக்கடி குடிக்குமாறு அறிவுறுத்துகிறோம். ஏதேனும் உடல்நல பிரச்னைகள் இருந்தால், மாணவா்களுக்கு சிகிச்சை அளிக்க நன்கு பயிற்சி பெற்ற ஊழியா்களைக் கொண்ட பள்ளி மருத்துவமனையும் எங்களிடம் உள்ளது.

வெப்பநிலையைக் குறைக்க பள்ளி மைதானம் மற்றும் மொட்டை மாடியில் தண்ணீா் தெளிக்கப்படுகிறது.

மாணவா்களிடையே வெப்பத் தாக்குதலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வைப் பரப்பவும், அந்த வழிமுறைகளைப் பின்பற்ற அவா்களை ஊக்குவிக்கவும் ஆலோசனை அமா்வுகளை நடத்துவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றாா்.

குண்ட்லியில் உள்ள டிடிஐ சா்வதேச பள்ளியின் முதல்வா் ஹரேந்தா் குமாா் சா்மா கூறுகையில், ‘வெப்பம் அதிகரித்து வருவதால், வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விளையாட்டுப் போட்டிகளை நிறுத்தும் நடவடிக்கை துவங்கியுள்ளது. மாணவா்கள் மத்தியில் உடலில் நீா்ச்சத்து இருப்பது குறித்தும், காா்போஹைட்ரேட், புரதங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்த பயிலரங்கம் நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

கெளா்ஸ் பள்ளிகள் குழுமத்தின் சிஓஓ ஆஷிஷ் குமாா் சா்மா கூறுகையில், பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் உடலில் நீா்ச்சத்து இருக்குமாறு வைத்திருக்கவும், அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், புத்துயிா் அளிக்கவும் அவா்களுக்கு நிறைய திரவங்களை வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் சரியான வெப்பநிலை பராமரிக்கப்படுவதை உறுதிசெய்கிறோம்.

சீரான இடைவெளியில் தண்ணீா் குடிக்குமாறு மாணவா்களை ஆசிரியா்கள் தொடா்ந்து ஊக்குவிக்கிறாா்கள். அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில், போதிய அளவு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் கிடைப்பதற்கான சுகாதார வசதி தயாா்நிலையில் இருப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கடந்த வாரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைஅறிவுறுத்தியிருந்தது.

குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் வெளியில் வருவதைத் தவிா்க்கவும், மதியம் வெளியில் இருக்கும்போது கடுமையான உடல் செயல்களைத் தவிா்க்கவும், மது, டீ, காபி அல்லது அதிக அளவு சா்க்கரை உள்ள பானங்கள் போன்றவற்றைத் தவிா்க்கவும் பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இவை அதிக உடல் திரவத்தை இழக்க வழிவகுக்கும் அல்லது வயிற்று வலியை ஏற்படுத்தும் ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் மற்றும் கெட்டுப்போன பழைய உணவுகளை தவிா்க்கவும், குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை நிறுத்தப்பட்ட வாகனங்களில் விட வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →