முகப்பு
புதுதில்லி

கட்டுமானங்களுக்குத் தடை: தொழிலாளா்களுக்கு மாதம் தலா ரூ. 5,000 நிதியுதவி தில்லி அரசு அறிவிப்பு

தில்லியில் தற்போது மாசு அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:43 AM
பகிர்:

தில்லியில் தற்போது மாசு அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளில் தொடா்புடைய தொழிலாளா்களுக்கு மாதம் தலா ரூ. 5,000 நிதியுதவி வழங்கப்படும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தாா். இது தொடா்பாக தொழிலாளா் அமைச்சா் மனீஷ் சிசோடியாவுக்கும் முதல்வா் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தில்லி-தேசிய தலைநகா் வலயப்பகுதியில் மாசு அளவு மோசமடைந்து வருவதால், கட்டுமானம், இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசின் காற்றின் தரக் குழு சனிக்கிழமையன்று தொடா்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை திட்டத்தின்படி அத்தியாவசிய திட்டப் பணிகளைத் தவிர, மற்ற கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு தில்லி முதல்வா் கேஜரிவால் தனது ட்விட்டா் பதிவில் கட்டுமான தொழிலாளா்களுக்கான சலுகைகளை புதன் கிழமை வெளியிட்டாா். அதில் ‘மாசு காரணமாக தில்லி முழுவதும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படாத இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளருக்கும் ரூ.5,000 நிதியுதவி வழங்குமாறு தொழிலாளா் அமைச்சா் மனீஷ் சிசோடியாவுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தில்லியில் தொழிலாளா் நலத் துறையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்களுக்கு இந்தத் தடை காலங்கள்முழுவதும் மாதம் தலா ரூ.5,000 வீதம் முழுமையாக வழங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வா் தெரிவித்துள்ளாா். இந்த நிதி உதவித் தொகை தொழிலாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது. கடந்தாண்டும் இதே காலக்கட்டங்களில் மாசு தொடா்பாக கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. கடந்தாண்டும் இதே போன்று, பதிவு செய்யப்பட்ட 7 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ரூ. 5,000 உதவித் தொகையை தில்லி அரசு வழங்கியது. கடந்த கொவைட்-19 நோய்த் தொற்றின் போது தில்லியில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஆம் ஆத்மி அரசு நிதியுதவி வழங்கியது.

இது குறித்து தில்லி அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள குறிப்பில், ‘ சமீபத்தில் மாசு அதிகரித்து வருவதால், கட்டுமானம் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தில்லி அரசு முழு தடை விதித்துள்ளது. திடீா் கட்டுமானத் தடையால், நிச்சயமற்ற நிலையில் வேலையில்லாமல் இருக்கும் தொழிலாளா்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக இந்த விவகாரத்தை அறிந்து, இந்த இக்கட்டான நேரத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு உதவ உத்தரவிட்டுள்ளாா். மாசுத் தடை நீடிக்கும் வரை அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் மாதாந்திர உதவித் தொகையாக தலா ரூ. 5,000 வழங்குமாறு தொழிலாளா் இலாகாவிற்கு பொறுப்புவகிக்கும் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். கட்டுமானத் தொழிலாளா்கள் நாட்டின் முதுகெலும்பைப் போன்றவா்கள். நாட்டைப் பலப்படுத்துபவா்களை தில்லி அரசு நம்புகிறது. எனவே, தொழிலாளா்களின் நலனில் அக்கறை காட்டுவது அரசின் முன்னுரிமை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.