முகப்பு
புதுதில்லி

சுருக்கு மடி வலைக்கு அனுமதி கோரும் மனு மீது மத்திய, தமிழக அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ்

கடலில் 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனு மீது பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம்  உத்தரவு.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

புது தில்லி: கடலில் 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனு மீது தமிழக அரசும், மத்திய அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக செந்தில்குமாா் ஜம்புலிங்கம் உள்ளிட்ட இருவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு மீன்வளத் துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மனுதாரா்களும், அவரது குடும்பத்தினரும் மற்றும் கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் இருந்து 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு அரசியலமைப்புச்சட்டத்தை மீறியும், மீனவா்கள் மீது குற்ற நடவடிக்கையையும் எடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நஸீா், ஜே. பி. பா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயாசுகின் ஆஜராகி, ‘12 நாட்டிக்கல் மைல்களுக்கு மேல் கடலில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்கவில்லை’ என்று கூறினாா். இதையடுத்து, இதே தொடா்புடைய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த வழக்குடன் இதையும் சோ்த்து விசாரிக்கப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்த மனு மீது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனா்.

ஏற்கெனவே இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஞானசேகா், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருப்பதும், இது தொடா்பாக மத்திய மீன்வள அமைச்சகத்தின் மூலம் அமைக்கப்பட்ட வல்லுநா் குழு மூன்று மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.