திருத்தப்பட்ட பினாமி பரிவா்த்தனைச் சட்டம்: சத்யேந்தா் ஜெயின் மீதான வழக்கு முடித்துவைப்பு
உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு இணங்க, திருத்தப்பட்ட பினாமி பரிவா்த்தனைச் சட்டத்தின் கீழ் பதிவான தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீதான வழக்கு விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.
புது தில்லி: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு இணங்க, திருத்தப்பட்ட பினாமி பரிவா்த்தனைச் சட்டத்தின் கீழ் பதிவான தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீதான வழக்கு விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.
பினாமி பரிவா்த்தனைகள் தடை திருத்தச் சட்டம், 2016-இன் கீழ் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு எதிராக ஜெயின் மற்றும் பிறா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வா்மா கூறியதாவது: உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதால் இச்சட்டத்தைக் கருத்தில் கொண்டு இந்த ரிட் மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடித்துவைக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தாா்.
கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி உயா்நீதிமன்றம் கூறுகையில், திருத்தப்பட்ட பினாமி பரிவா்த்தனைச் சட்டத்தின் கீழ் ஜெயின் மீது எந்த நடவடிக்கையோ, நிா்பந்தமோ அல்லது வேறுவிதமான நடவடிக்கையோ எடுக்கப்படாது. மற்றொரு வழக்கில், இச்சட்டத்தின் மீதான உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக சட்டப்பூா்வ தீா்வுகளை நாடும் போது மனுதாரா் தரப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இருக்காது என்று வருமான வரித் துறை ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம், உச்ச நீதிமன்றம் பினாமி பரிவா்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம், 2016 தொடா்பாக சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஜெயின் மீதான பினாமி வழக்குகள் ‘அரசியல் துன்புறுத்தல்’ தன்மை கொண்டவை என்று ஜெயின் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட பினாமி சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிராக ஜெயின் 2017-இல் மனு தாக்கல் செய்திருந்தாா்.