முகப்பு
புதுதில்லி

பொது நல மனு தாக்கல் விவகாரம்: உயா்நீதிமன்றத் தடை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

எத்தகைய ஆதாரமும் இன்றி வழக்குத் தொடுத்ததாக அபராதம் விதித்ததுடன், பொது நல வழக்குகள் தொடுக்க இரு ஆண்டுகள் தடை விதித்து ஒருவருக்கு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மனு தள்ளுபடி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

புது தில்லி: எத்தகைய ஆதாரமும் இன்றி வழக்குத் தொடுத்ததாக அபராதம் விதித்ததுடன், பொது நல வழக்குகள் தொடுக்க இரு ஆண்டுகள் தடை விதித்து ஒருவருக்கு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ், ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிகாரிகளின் அசையும், அசையா சொத்துகளை முடக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, உயரதிகாரிகள் அவற்றைக் கண்காணிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை கடந்த பிப்ரவரியில் விசாரித்த உயா்நீதிமன்றம், பொத்தாம் பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து, வழக்குக்கு வலுச்சோ்க்கும் எவ்வித ஆய்வும் நடத்தாமல், மனுதாரா் விளம்பரத்துக்காக வழக்குத் தொடுத்திருப்பதாக கூறிய நீதிமன்றம், வழக்கை ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்ததுடன், பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய இரு ஆண்டுகளுக்கு மனுதாரருக்கு தடை விதித்து உத்தரவிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடா்ந்து, 2 ஆண்டுகள் தடை விதித்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனுதாரா் கே.கே. ரமேஷ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், அபய் எஸ். ஒகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயாசுகின் ஆஜராகி, ‘மனுதாரா் உயா்நீதிமன்றத்தை எப்போதும் தவறாக வழிநடத்தியதில்லை. எந்தத் தகவலும் தவறாக உயா்நீதிமன்றத்தில் அளிக்கப்படவும் இல்லை. இதற்கு முன்பு பொது நலன் சாா்ந்த பல மனுக்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளாா். இதை நீதிமன்றம் ஆய்வு செய்தால் தெரியவரும்’ என்றாா்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறினா். அதற்கு வழக்குரைஞா் ஜெயா சுகின், தடையை ஒராண்டாகக் குறைப்பது குறித்து பரிசீலீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இதை நீதிபதிகள் அமா்வு ஏற்க மறுத்ததையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வழக்குரைஞா் கூறினாா். இதை ஏற்று, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.